எம்.பி.ஏ. பட்டதாரி மூலிகை டீ விற்பனை செய்கிறார்

புதுவை முத்தியால்பேட்டையை சேர்ந்தவர் சுரேஷ் சபாபதி. எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் சொந்தமாக செல்போன் சர்வீஸ் மற்றும் கம்ப்யூட்டர் பழுது பார்க்கும் கடை நடத்தி வந்தார்.

கொரோனா ஊரடங்கால் இவரது தொழில் பாதிக்கப்பட்டது. இதனால், 3 மாதங்களாக வேலை இல்லாமல் கடையை மூடி வைத்தார்.

வருமானம் இல்லாததால் வீட்டு வாடகை, கடை வாடகையை கொடுக்க முடியாத நிலை உருவானது.

இதனையடுத்து மாற்று வேலைக்கு செல்லலாமா என்று சிந்தித்து தற்போது மக்களின் அத்தியாவசிய தேவையான எதிர்ப்பு சக்தி தரும் பானம் விற்க முடிவெடுத்தார்.

கடந்த 10 நாட்களாக கடற்கரை சாலை அருகில் அதிகாலை 5 மணி முதல் தனது இருசக்கர வாகனத்தையே விற்பனையகமாக மாற்றி எதிர்ப்பு சக்தி பானம் விற்று வருகிறார்.

இதுகுறித்து கடற்கரை சாலையில் விற்றுக்கொண்டிருந்த எம்.பி.ஏ. பட்டதாரி சுரேஷ் சபாபதி கூறியதாவது:-

கொரோனா பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. என்னுடைய தொழில் முடங்கியதால் வாடகை மற்றும் வாழ வழி தேடி மக்களுக்கு தேவையான எதிர்ப்பு சக்தி பானத்தை விற்க முடிவு செய்தேன்.

இதில் மக்களை ஈர்க்கும் வகையில் சீரக நீருடன், தேன், இஞ்சி, புதினா, எலுமிச்சை ஆகியவற்றை கலந்து உடலில் எதிர்ப்பு சக்தியை கூட்டும் தேநீரை விற்க தொடங்கினேன்.

தொடக்கத்தில் நிலைமை இப்படியாகி விட்டதே என்ற மன கஷ்டம் இருந்தது. ஆனாலும், ஏதாவது ஒரு வகையிலும் வருமானத்தை ஈட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது

இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here