தன் மீது கூறப்பட்ட பாலியல் புகாரை, பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பைபர் மறுத்துள்ளார்.
பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பைபர். கடந்த சில நாட்களுக்கு முன் இவர் மீது பெண் ஒருவர் ட்விட்டரில் பாலியல் புகார் கூறியிருந்தார்.
அதில் கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9 ஆம் தேதி ஜஸ்டின் பைபர், தன்னை பாலியல் வன்கொடுமை செய்தார் என்று கூறியிருந்தார்.
டெக்சாஸில் உள்ள போர் சீசன்ஸ் நட்சத்திர ஓட்டலில் வைத்து இந்த சம்பவம் நடந்தது என்றும் கூறியிருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இந்தக் குற்றச்சாட்டை ஜஸ்டின் பைபர் மறுத்துள்ளார்.
அந்த புகாரில் எந்த உண்மையும் இல்லை. என் மீது வருகின்ற பொதுவான குற்றச்சாட்டுகள் குறித்து நான் பேசுவதில்லை. என் மனைவி மற்றும் குழுவுடன் ஆலோசித்த பிறகு இதுபற்றி பேச முடிவு செய்தேன். வதந்தி எப்போதும் வதந்தியாகவே இருக்கிறது. ஆனால், பாலியல் துன்புறுத்தல் புகாரை நான் சாதாரணமாக விட்டு விட முடியாது. அதற்காக சில தகவல்களை சேகரித்தேன் என்று தெரிவித்துள்ளார்.
கூடவே அந்த நாளில் அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் புகைப்படங்கள் சிலவற்றையும் பதிவிட்டுள்ளார்.அந்த நேரத்தில் தனது முன்னாள் காதலியும் பாடகியுமான சலினா கோமஸுடன் அந்த ஓட்டலில் தங்கி இருந்ததாக ஜஸ்டின் பைபர் தெரிவித்துள்ளார்.