சிறார் திருமணத்திற்கான காரணங்களைக் கையாளும் தேசிய வியூகத் திட்டத்தின் எதிர்காலம் குறித்து டுவிட்டரில் கேள்வி எழுப்பிய சிகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினர் வாக்குமூலம் தருவதற்கு இன்று காலை புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்திற்கு வந்தார்.
காலை 10 மணிக்கு புக்கிட் அமான் வந்தடைந்த மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை முன்னாள் அமைச்சருமான ஹன்னா இயோவுடன் அவரின் வழக்கறிஞர்கள் கோபிந்த் சிக் டியோ மற்றும் ஷாரெட்ஸான் ஜோஹான் உடன் வந்தனர்.
அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பக்காத்தான் ஹராப்பான் தலைவர்களான ஜசெக தேசியத் தலைவர் டான் கோக் வாய், பிகேஆர் தொடர்புத்துறை இயக்குநர் ஃபாஹ்மி ஃபட்ஸில், அமானா கட்சி மகளிர் பிரிவுத் தலைவி செனட்டர் அய்மான் அதிரா அல்-ஜூன்டி புக்கிட் அமான் நுழைவாசல் கேட் முன்பாக திரண்டனர்.
இயோவின் இப்பதிவு நிந்தனைக்குரிய அம்சங்களைக் கொண்டிருக்கிறது. இது சில தரப்பினரைத் தூண்டிவிடக்கூடிய அபாயம் உள்ளது என்று புக்கிட் அமான் சிஐடி இயக்குநர் கமிஷனர் டத்தோ ஹுஸிர் முகம்மட் ஓர் அறிக்கையில் கூறினார்.
1998ஆம் ஆண்டு தொலைத்தொடர்பு பல்லூடகச் சட்டத்தின் கீழ் இவரிடம் விசாரணை நடத்தப்படும். இந்தச் சட்டத்தின் கீழ் தவறு இழைத்திருந்தால் 2 ஆண்டு சிறை அல்லது அபராதம் விதிக்கப்படலாம் என்றார் அவர்.
போலீசாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன் எனக் குறிப்பிட்ட ஹன்னா இயோ, எனக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள மிக கடுமையான விவகாரமாக இது விளங்குகிறது. இதற்கு நல்ல முறையில் தீர்வு காண்பேன் என்றார்.
(updated)
வயது குறைந்த பெண்கள் திருமணம் தொடர்பில் தனது டுவிட்டரில் கருத்துரைத்த சிகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினர் ஹன்னா இயோவிடம் நேற்று புக்கிட் அமான் போலீசார் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையின்போது கைத்தொலைபேசியை போலீசாரிடம் ஒப்படைத்தேன். மேலும் எனது ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டரின் பதிவையும் கொடுத்திருப்பதாக ஹன்னா இயோ தெரிவித்தார்.
வயது குறைந்த பெண்கள் திருமணம் தொடர்பில் மூன்று மாதத்திற்கு முன்னர் எனது டுவிட்டரில் கருத்துகளை முன் வைத்தேன்.
அது தொடர்பில் நேற்று என்னிடம் ஒரு மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தனர். இந்த விசாரணையின்போது போலசார் நல்லவிதமாக நடந்து கொண்டனர் என்றார் அவர்.
போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினேன். தகவல் தொழில்நுட்பம், பல்லூடகச் சட்டம் 233 பிரிவின் கீழ் நிந்தனைச் சட்டத்தின் கீழ் என்னிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது என்றார் அவர்.