பைரவருக்கு அனுஷ்டிக்க வேண்டிய விரதங்களும்….தீரும் பிரச்சனைகளும்…

1. நமது ஜாதகத்தில் அமைந்துள்ள அனைத்து கிரக தோஷங்களையும் நிவர்த்தி செய்ய வல்லது பைரவர் வழிபாடு.

2. இறைவனின் அருவ வழிபாட்டுமுறை- சிவலிங்கம், இறைவனின் திருஉருவம் வழிபாட்டு முறை- ஸ்ரீகால பைரவ ஸ்வரூபம் எனப்படும்.

3. இறைவன் கண்விழி திறந்தால் கால பைரவர் ஸ்வரூபம், இதுவே ஓங்காரம் தத்துவம்.

4. கிருஷ்ணபட்ச அஷ்டமி திதியில் பைரவர் அவதாரம் நிகழ்ந்ததாக சத்ருத்ர சம்ஹிதாவின் 8-வது அத்தியாயம் குறிப்பிடுகிறது.

5. நமது வழிபாடுகளுக்கு உடனடி நிவாரணம் தரும் கடவுளாக பைரவர் விளங்குகிறார்.

6. விரதம் இருந்து பைரவரை காலையில் வழிபட அனைத்து நோய்களும் நீங்கும். பகலில் வழிபட விரும்பியது அனைத்தும் கிட்டும். மாலையில் வழிப்பட செய்த பாவங்கள் விலகும். இரவில் வழிபட முக்தி நிலை கிட்டும்.

7. பைரவரை உபாசனை செய்து வழிபட்டால் அடுத்த பிறவி இல்லை.

8. வாழ்க்கையில் பல தரப்பட்ட காரணங்களால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு உரிய பரிகாரங்களாக கால பைரவர் விரத வழிபாடு முறைகளை வகுத்து தந்துள்ளனர்.

9. ஜாதகத்தில் 19 வருடம் சனி திசை நடப்பில் இருந்தால் அந்த ஜாதகத்துக்குரியவர் சனிக்கிழமையில் ஸ்ரீபைரவர் விரதம் இருந்து வழிபாட்டை செய்து வர வேண்டும்.

10. செவ்வாய்க்கிழமை அல்லது ஞாயிற்றுக் கிழமையில் விரதம் இருந்து எமகண்டம் நேரத்தில் ஸ்ரீ பைரவருக்கு தயிர், தேங்காய், தேன் படைத்து, வில்வ, வன்னி செவ்வரளி மாலை அணிவித்து, வேக வைத்த கொள்ளும், சர்க்கரையும் கலந்து செய்த உருண்டை, கொள்ளுப்பொடி கலந்து அன்னம் விளாம்பழம் அலல்து வில்வப்பழம் படைத்து ஒரு பூசணியில் மிளகு தீபமும், ஒரு தேங்காயில் மிளகு தீபமும் ஏற்றி அர்ச்சனை செய்து வந்தால் கேது தசையின் பாதிப்புகள் நீங்கி நல்லது நடக்கும்.

11. பிரதோஷம் அல்லது மாதசிவராத்திரி அன்று சிவலிங்கம் சுவாமிக்கு அல்லது விநாயகருக்கு மூன்று நெய்தீபம் ஏற்றி பைரவருக்கு தயிர் அன்னம், வடைமாலை செலுத்தி ஐந்து பழங்களில் மிளகு தீபம் ஏற்றி பஞ்சதீபம் வழிபட்டால் வாழ்க்கையிலும், வழக்குகளிலும் வெற்றி கிட்டும்.

12. வலம்புரி சங்கில் ஐந்து வித எண்ணெய் சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து முப்பது மிளகுத்தூள் செய்து தாமரை தண்டு திரியையும் சிவப்பு துணியையும் சேர்த்து திரியாக திரித்து 48 நாட்கள் பைரவருக்கு வீட்டில் தீபம் ஏற்ற வேண்டும். இவ்வாறு செவ்வாய், சனிக்கிழமையில் செய்து வந்தால் வாஸ்து தோஷம் நிவர்த்தியாகும்.

13. வீட்டில் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை கணபதி, லட்சுமி, நவக்கிரக, மிருத்துஞ்சனம், தன்வந்திரி யாகங்களை செய்து கடைசியில் மஹா ருத்ர பைரவர் யாகம் செய்வது நல்லது.

14. விரதம் இருந்து ஒன்பது தேய்பிறை அஷ்டமிகளில் பைரவருக்கு சிவப்பு நிற அரளிப்பூ அணிவித்து பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் நல்ல மக்களையும், 16 செல்வங்களையும் பெறலாம்.

15. அஷ்டமி, ஆயில்யம், சுவாதி, பரணி, மிருகசீரிஷம் நட்சத்திர தினங்களில் விரதம் இருந்து பைரவரை வழிபட்டு வந்தால் உத்தியோகத்தில் மதிப்பும் பதவி உயர்வும் கிட்டும். செய்தொழிலில் லாபம் வரும்.

16. பித்ரு தோஷம் உள்ள ஒருவரின் குடும்பத்தில் தொடர்ந்து துன்பங்களும், கஷ்டங்களுமே ஏற்படும். அப்படிப்பட்ட ஜாதகர், ஸ்ரீபைரவர் பூஜை மூலம் பித்ரு தோஷத்தை நிவர்த்தி செய்து வாழ்க்கையில் நிம்மதியும், சந்தோஷமும் பெறலாம்.

17. கால பைரவர் உடலில் பூமியைத் தாங்கும் எட்டு நாகங்கள் மாலையாக இருக்கிறது. எனவே கால பைரவரை விரதம் இருந்து வழிபடுவதன் மூலம் சர்ப்ப தோஷங்கள் விலகும்.

18. விரதம் இருந்து பைரவருக்கு பழங்கள் மற்றும் காய்கறிகளில் தீபம் ஏற்றுவது மிகவும் நல்லது. பூசணி, பறங்கி போன்ற பெரிய பழங்களில் தீபம் ஏற்ற வேண்டும். அதற்கு வசதி இல்லாதவர்கள் நாரத்தை எலுமிச்சை பழம் போன்ற சிறிய பழங்களில் கூட தீபம் ஏற்றலாம்.

19. 64 கோத்திர ரிஷிகளும் பைரவருக்குள் அடங்கி இருக்கிறார்கள். எனவே பைரவர் சன்னிதானத்தில் அமாவாசையில் பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் ரிஷி தர்ப்பணம் செய்த பலன் சித்திக்கும்.

20. விரதம் இருந்து கால பைரவரை இடைவிடாமல் தொடர்ந்து வழிபட்டு வருபவர்களுக்கு ஆகம தந்திர சாஸ்திரங்களில் உயர்ந்த நிலை கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here