3லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் 650 கோடி வெள்ளி மதிப்பு கொண்ட திட்டத்தின் தற்போதைய நிலை என்ன?

புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி மலேசிய இளைஞர்களின் வேலையில்லா திண்டாட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு உதவியாக நிதியமைச்சின் மூலமாக உருவாக்கப்பட்ட திட்டங்கள் எந்த நிலையில் உள்ளது என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.

மலேசிய இளையோர் பட்டதாரிகளாக இருந்தும் வேலை வாய்ப்பு இன்றி சிரமப்பட்டு வரும் சூழல் தொடர்ந்து வருவதால் நிதியமைச்சு இதற்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களில் படித்துப் பட்டம் பெற்ற இளையோர் பலர் வேலை வாய்ப்பு இல்லாத காரணத்தால் சிரமப்படும் சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளனர் என்பது கடந்த ஐந்து ஆண்டுகளாக தீவிரத்தன்மைக்குள் தள்ளப்பட்ட விவகாரமாக உருவெடுத்திருப்பதை மலேசியர்கள் அனைவரும் அறிவர்.

அரசாங்கமும் இதனை நன்கு உணர்ந்து கொண்டுள்ள நிலையில்தான் 2020 வரவு செலவு திட்ட அறிக்கையின் ஒரு பகுதியாக இபிஎப் எனப்படும் ஊழியர் சேமநிதி வாரியம் வாயிலாக ஒரு திட்டத்தை நிதியமைச்சு மூலமாகக் கொண்டு வந்தது.

“கிராடுவான் கெர்ஜா”, “வனித்தா கெர்ஜா”, “வாத்தான் கெர்ஜா”, “பெரான்த்திஸ்  கெர்ஜா” என நான்கு வகையாக பிரிக்கப்பட்டு மலேசிய இளையோருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதற்காக 650 கோடி மலேசிய வெள்ளி இதற்காக ஒதுக்கப்பட்டது.

அப்போது நிதியமைச்சராக இருந்த லிம் குவான் எங் இதனை உறுதிப்படுத்தியிருந்தார். சமூக ஊடகங்கள், தொலைக்காட்சி என அனைத்திலும் வெளியான இத்தகவலை மலேசியர்கள் அறிந்து வைத்துள்ளனர்.

ஒதுக்கப்பட்ட நிதியின் பயன்பாடு எந்த அளவுக்கு உள்ளது? எத்தனை மலேசியர்களுக்கு இத்திட்டம் போய்ச் சேர்ந்திருக்கிறது?

ஒதுக்கப்பட்ட 650 கோடி வெள்ளி நிதி வாயிலாக வேலையில்லா திண்டாட்டம் ஒழிக்கப்பட்டிருக்கிறதா என்பதை நிதியமைச்சு வெளிப்படுத்த வேண்டும்.

ஊழியர் சேமநிதி வாரியம் இந்த நிதியைக் கொண்டு எத்தனை இந்திய பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளது என்பது குறித்து தெளிவுபடுத்த வேண்டும்.

நிறுவனங்கள் புதிய வேலையாட்களை வேலைக்கு எடுத்துக் கொள்வதற்கும் இந்நிதி பயன்படுத்தப்படும் எனவும் லிம் குவான் எங் அப்போது அறிவித்திருந்தார்.

அந்த அறிவிப்பின் சார்பில் எத்தனை நிறுவனங்கள் எத்தனை வேலையாட்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது என்பது குறித்து லிம் குவான் எங் விளக்கமளிக்க வேண்டிய கடப்பாடு அவருக்கு உள்ளது.

தற்போது அவர் நிதியமைச்சர் பதவியில் இல்லை என்றாலும் இத்திட்டத்தை அறிவித்தவர் என்ற வகையில் ஒதுக்கப்பட்ட நிதியின் பயன்பாடு குறித்து அவர் விளக்கமளிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார் என்பதை சமூகக் கடப்பாட்டோடு நினைவுபடுத்த விரும்புகிறோம்.

தகவல் அறியும் உரிமையின் அடிப்படையில் இக்கேள்வி எழுப்பப்படுகிறது.

மிக விரைவில் இத்திட்டத்தின் முழு செயல்பாடுகள் குறித்து ஊழியர் சேமநிதி வாரியம் விளக்கம் அளிக்கும் என நாடாளுமன்றத்திற்கு வெளியே பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது குவான் எங் கூறியிருந்தார்.

ஊழியர் சேமநிதி வாரியம் இத்திட்டத்தை செவ்வனே செயல்படுத்தியிருக்கும் என்பதால் அதன் உள்ளார்ந்த அம்சங்கள் என்னென்ன? மலேசிய இந்திய பட்டதாரி இளைஞர்களுக்கும் இதர வேலையில்லாத இந்திய இளைஞர்களுக்கும் எந்த வகையில் உதவிகள் நல்கப்பட்டிருக்கிறது?

இத்திட்டத்தின் வாயிலாக எத்தனை இந்தியர் பலனடைந்திருக்கிறார்கள் என்பதை லிம் குவான் எங்கும் மலேசிய ஊழியர் சேமநிதி வாரியம் என இரு தரப்பும் தெளிவுபடுத்த வேண்டும்.

வேலை வாய்ப்பு வழங்கப்பட அல்லது வழங்கப்பட்டு விட்ட 3 லட்சத்து 50 ஆயிரம் மலேசியர்கள் தொடர்பான முழு விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என நம்புகிறோம்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here