பெண்ணின் கழுத்தில் ஏறி நின்ற காவலர், உடனே பணியிடை நீக்கம்

அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்பவர் காவலர் ஒருவரால் கழுத்தில் மிதித்து கொல்லப்பட்டு சில வாரங்களே ஆகியுள்ள நிலையில், பிரேசிலில் காவலர் ஒருவர் பெண்ணின் கழுத்தின் மீது ஏறி நின்றது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசிலின் சவோ பவுலோ பகுதியில் 51வயது பெண்ணின் நண்பருக்கும் போலீஸ்காரர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சமாதானம் செய்ய வந்த ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த பிரேசிலிய பெண், காவலர்களுடன் வாக்குவாதம் செய்திருக்கிறார்.

இதனால் கோபம் அடைந்த காவல் அதிகாரி பெண்ணின் கழுத்தின் மீது ஏறி நின்றுள்ளார். இது தொடர்பான வீடியோ வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில், காவல்துறை அதிகாரி ஒருவர் தன் துப்பாக்கியால் ஒருவரை குறி வைக்கிறார். விலங்கிடப்பட்டநிலையில் இருந்த அந்த நபரை போலீசார் கீழே தள்ளிவிட்டுள்ளனர்.

பின்னர், அவருடன் இருந்த 51 வயதான பெண்ணையும் கீழே தள்ளி அவருடைய கழுத்துப் பகுதியில் தனது பூட்ஸ் காலுடன் ஏறி அந்த அதிகாரி நிற்கிறார். பின்னர், அவருடன் இருந்த நபரை போலீசார் கைது செய்து இழுத்துச் செல்கின்றனர். இவ்வாறாக காட்சி நிறைவு பெறுகிறது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில் அவர் என்னை கழுத்தில் மிதித்த தருணத்தில் மிகவும் கஷ்டப்பட்டேன். அவ்வளவு அதிகமாக எனது கழுத்தை அவர் இறுக்கினார் என்று தெரிவித்துள்ளார். இதில் காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

அதிகாரிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை பொறுத்துக்கொள்ள முடியாது என்றார் அவர். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட அதிகாரிகள் இருவரை சஸ்பெண்ட் செய்ய ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இரு காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here