மதுரையில் அழகர்கோவில் மலை மற்றும் சுற்றுப்பகுதியில் அதிகளவில் குரங்குகள் காணப்படுகின்றன. அழகர்கோவில் மலையில் இருக்கும் குரங்குகளுக்கு, பக்தர்கள் கொடுக்கும் உணவு தான் பிரதானம். அங்குள்ள ஆயிரக்கணக்கான குரங்குகளில் அவ்வப்போது சில வழி தவறி ஊருக்குள் வருவது வழக்கம்.
கொரோனா ஊரடங்களால் கடந்த சில மாதங்களாக அழகர்கோவில் மற்றும் மலை மீதுள்ள ராக்காயி அம்மன் கோவில் மூடப்பட்டுள்ளன. பக்தர்கள் வருகையின்றி, அங்கிருக்கும் குரங்குகளுக்கும் உணவு கிடைக்கவில்லை. அவை பசியால் தவித்தன.
இந்தநிலையில் மேலூர் நகரில் சில மாதங்களாக மூடிக்கிடந்த ஒரு தியேட்டரை திறந்தனர். உள்ளே பார்த்தால் தியேட்டரின் இருக்கைகளில் பார்வையாளர்களை போல ஏராளமான குரங்குகள் அங்கும், இங்குமாக இருக்கைகளில் அமர்ந்தும், விளையாடிக்கொண்டும் இருந்தன. அவை இருக்கைகள் உள்ளிட்டவற்றை கிழித்து அட்டகாசம் செய்தன. மலையில் இருந்ததை போல தியேட்டருக்குள்ளும் மகிழ்ச்சியாக தாவித்தாவியும், குதித்தும் கும்மாளமிட்டன. இதனால் அதிர்ச்சி அடைந்த தியேட்டர் ஊழியர்கள், இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர்கள் தியேட்டருக்கு விரைந்து வந்தனர்.
வனவர் கம்பக்குடியான் தலைமையிலான வனத்துறையினர் தியேட்டருக்குள் இருந்த குரங்குகளை லாவகமாக ஒவ்வொன்றாக பிடித்து கூண்டில் அடைத்தனர். மொத்தம் 35 குரங்குகள் பிடிபட்டன. சில தப்பி ஓடிவிட்டன.
இந்த குரங்குகளை மீண்டும் அழகர்மலைக்கு கொண்டு சென்றுவிட்டனர். இதனைப்போலவே மேலூர் நகரில் வீடுகளுக்கு புகுந்து தொல்லை தரும் குரங்குகளையும் பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.