உள்ளாட்சி ஊழல் புகார்களை விசாரிக்க நடுவர் நியமிக்கப்படுவார்!

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் நடக்கும் முறைகேடுகள், ஊழல் புகார்களை விசாரிக்க, உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவர் 8 வாரத்திற்குள் நியமிக்கப்படுவார் என, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு, பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள், மத்திய அரசு அதிகாரிகளுக்கு எதிரான ஊழல் புகார்களை விசாரிக்க, லோக்பால் சட்டம் நிறைவேற்றியது. அதுபோல, அந்தந்த மாநிலங்களில், முதல்வர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிரான புகார்களை விசாரிக்க, லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த வரிசையில், உள்ளாட்சி அமைப்புகளில், மேயர், துணைமேயர் முதல் பஞ்சாயத்துத் தலைவர், உறுப்பினர்கள் வரையிலான நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் மீதான ஊழல் புகார்கள், முறைகேடு குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க, 2014- ஆம் ஆண்டு, தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம் அமைக்கப்பட்டது.

இந்த நடுவத்தின் நடுவராக முதலில் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சோ.அய்யர், கடந்த மார்ச் வரை இப்பதவியில் நீடித்தார். தற்போது, இப்பதவி காலியாக உள்ளது. இப்பதவிக்கு, தகுதியானவர்களை முதல்வர் பரிந்துரைக்க, ஆளுநர் நியமனம் செய்ய வேண்டும்.

தற்போது பதவி காலியாக உள்ளதாலும், ஏராளமான முறைகேடு புகார்கள் நிலுவையில் உள்ளதாலும், நடுவரை நியமிக்கும்படி ஆளுநரின் செயலருக்கும், தமிழக அரசுக்கும் உத்தரவிடக் கோரி, அன்பழகன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தில், பொதுமக்கள் சார்பில் அளிக்கப்பட்ட புகார்கள் ஏராளமான அளவில் நிலுவையில் உள்ளன. இதுவரையிலும், எந்த அதிகாரியின் பெயரும் பரிந்துரைக்கப்படவில்லை. கரோனா பரவல் அதிகம் உள்ள நிலையில், உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும், அதிகாரிகளும் முறைகேடுகளில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் கரோனா காலம் தற்போது இருப்பதாகவும், அதனால் எந்தக் கூட்டமும் இது தொடர்பாக நடத்தப்படவில்லை எனவும் தெரிவித்தார். மேலும் 8 வாரத்திற்குள் கூட்டம் நடத்தி, உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவர் நியமிக்கப்படுவார் எனத் தெரிவித்தார்.

அரசின் பதிலைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here