சிறப்பு வாய்ந்த கருடனைப் பற்றிய சில தகவல்கள்

 காஞ்சியில் கருட சேவையை அதிகாலையில் தரிசிப்பது மிகவும் விசேஷம்

‘திருமாலும் கருடனும் ஒருவரே’ என்று மகாபாரதத்தில் உள்ள அனுசாசன பர்வத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஞானம், பலம், ஐஸ்வர்யம், வீர்யம், அதீத சக்தி, தேஜஸ் என்ற ஆறு விதமான குணங்களுடன் கருடன் திகழ்கிறார். கருடனுடைய மகிமையை ஏகாதசி திதி மற்றும் திருவோண நட்சத்திரத்தில் படிப்பவர்களும், கேட்பவர்களும் கடும் நோய்களில் இருந்து விடுதலை பெறுவர்.

கருடனுக்கு கருத்மான், சாபர்ணன், பந்தகாசனன், பதகேந்திரன், பகிராஜன், தார்ச்டயன், மோதகாமோதர், மல்லீபுஷ்யபிரியர், மங்களாலயர், சோமகாரீ, பெரிய திருவடி, விஜயன், கிருஷ்ணன், ஜயகருடன், புள்ளரசு, கலுழன், சுவணன்கிரி என்றும், ஓடும்புள், கொற்றப்புள் என்றும் பெயர்கள் உண்டு.

வைணவ ஆழ்வார்கள் நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் 36 இடங்களில் கருடனை போற்றிப் புகழ்ந்து பாடியிருக்கிறார்கள். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்துள்ளது அரியக்குடி. இங்கு எழுந்தருளி இருப்பவர் ஸ்ரீனிவாசப் பெருமாள். இங்கு மூலைக் கருடன் வழிபாடு சிறப்பானது. நல்லது நடக்கவும், தீமைகள் மறையவும் இங்கு மூலைக் கருடனுக்கு சிதறுகாய் உடைப்பது வழக்கம்.

பதினெட்டு நாட்கள் நிகழ்ந்த மகாபாரதப் போரில் கடைசி நாள் போர், கருட வியூக யுத்தமாக நடந்தது. இதுவே பாண்டவர்களுக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தது. கருடனால் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து கொண்டு வரப்பட்ட வைரமுடி என்கிற அணிகலன், தற்பொழுது கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ள மேல்கோட்டை என்னும் திருநாராயணபுரத்து பெருமாளுக்கு சூட்டப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி இன்றும் ஒவ்வொரு பங்குனி ஏகாதசியில் வைரமுடி சேவை என்று திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீவில்லிப்புத்தூரில் ரெங்கமன்னர் ஆண்டாளுடனும் கருடனுடனும் ஒரே ஆசனத்தில் காட்சி தருவது வேறு எந்த தலத்திலும் இல்லாத சிறப்பு.

எல்லா திவ்ய தேசங்களிலும் இரண்டு கரங்களையும் குவித்து வணங்கும் கருடாழ்வாரைத்தான் காணமுடியும். திருக்கண்ணங்குடி என்ற திவ்ய தேசத்தில் மட்டும் இரண்டு கைகளையும் கட்டிக் கொண்டு காட்சி தரும் கருடனை தரிசிக்கலாம். இந்தக் காட்சி வைகுண்டத்தில் கருடன் எழுந்தருளியுள்ள காட்சி என்று கூறுவார்கள்.

கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருவெள்ளியங்குடி என்ற தலத்தில் கருடாழ்வார் நான்கு கரங்களுடன் கைகளில் சங்கு சக்கரமும் ஏந்தி காட்சி தருவது வேறு எந்தத் தலத்திலும் கிடையாது. சங்கு சக்கரங்களைப் பெற்றதால் பெருமாளின் சக்தியே தன்னிடம் வரப்பெற்றவராய் கருடாழ்வார் இங்கு திகழ்கிறார். ஆழ்வார் திருநகரியில் நடைபெறும் ‘நவ கருட சேவை’ மிகச் சிறப்பானது. வைகாசி விசாகம் இறுதியாக நம்மாழ்வாருக்கு பத்து நாள் திரு அவதார திருநாள் நடைபெறுகிறது. இதில் ஐந்தாவது நாள் நவதிருப்பதி எம்பெருமாள்கள் ஆழ்வார் திருநகரிக்கு எழுந்தருளி அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். இரவு ஒன்பது பெருமாளுக்கும் கருட சேவை நடத்தப்படும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here