எனவே, ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா என்ற பெயரில் மத்திய அரசு அறக்கட்டளை ஒன்றை நிறுவியது. அயோத்தி ராமஜென்ம பூமியில் ராமருக்கு பிரமாண்ட கோவில் கட்டுவது என முடிவு செய்து இந்த அறக்கட்டளை சார்பில் கோவில் கட்டுமான பணிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அதன்படி, ஆகஸ்டு 5ஆம் தேதி (இன்று) ராமர் கோவிலுக்கான பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கிடையே, கொரோனா தொற்று அச்சுறுத்தல் ஏற்பட்டதால் முக்கிய பிரபலங்கள், சாமியார்கள் என 175 பேருக்கு மட்டுமே அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது. மேலும் விழாவுக்கான ஏற்பாடுகளும், பாதுகாப்பு நடவடிக்கைகளும் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டன. முதல் கட்டமாக, பிரதமர் மோடி அயோத்தி அனுமன் கார்ஹி கோவிலில் வழிபாடு செய்தார். அதைத்தொடர்ந்து, குழந்தை ராமர் கோவிலுக்கு சென்று வழிபட்டார். அதன்பின் அங்குள்ள வளாகத்தில் பாரிஜாத மலர்க்கன்றை நட்டுவித்தார்.
இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜையில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, 40 கிலோ எடை கொண்ட வெள்ளியிலான செங்கலை அடிக்கல் நாட்டினார். இதில், முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், கவர்னர் ஆனந்தி பென் படேல், ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகிகள், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும், ஆர்.எஸ்.எஸ். துணைத்தலைவர் பையாஜி ஜோஷி, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், மாநில முன்னாள் முதல்-மந்திரி கல்யாண் சிங், பாபா ராம்தேவ் மற்றும் விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகிகள், பா.ஜ.க. தலைவர்கள் என முக்கிய பிரபலங்களும் ராமர் கோவில் பூமி பூஜையில் பங்கேற்றனர். ராமர் கோவிலுக்கான பூமி பூஜை நடைபெறுவதையொட்டி அயோத்தி முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. மோடி பிரதமரான பிறகு அயோத்தியில் சாமி தரிசனம் செய்வது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.