நேபாள நிலச்சரிவில் புதையுண்ட 21 பேரை மீட்கும் பணி தீவிரம்

நேபாள நாட்டில் பருவமழை காலத்தில் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர்ந்து சில நாட்களாக பெய்த கனமழையால் சாலையெங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

ஒருபுறம் கொரோனா பாதிப்புகளுக்காக மக்கள் வெளியே வருவது கட்டுப்படுத்தப்பட்ட சூழலில், கனமழை மற்றும் வெள்ளத்தினால் வீடுகளை சூழ்ந்து நிற்கும் மழைநீரில் நீந்தி செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்வு வாழ்க்கை முடங்கியுள்ளது.

சாலைகள் முழுவதும் வெள்ளநீர் தேங்கி வாகன போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது. மற்றொரு புறம் கனமழையால் நிலச்சரிவு சம்பவங்களும் ஏற்பட்டன. நேபாளத்தின் வடக்கு மத்திய பகுதியில் அமைந்த சிந்துபால்சோக் நகரில் லிடிமோ லாமா டோல் மற்றும் ஜுகல் கிராம பகுதிகளில் கடந்த 14ந்தேதி காலை 6.30 மணியளவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 37 வீடுகள் இடிந்து விழுந்தன.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் நேபாள ராணுவம், ஆயுத காவல் படை மற்றும் நேபாள காவலர்கள் என 150 பாதுகாப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் மாதவ் பிரசாத் கப்லே கூறியதாவது:-

‘கடந்த 14-ம் தேதி 11 உடல்கள் மீட்கப்பட்டன. 15-ம்தேதி 2 குழந்தைகள் உட்பட, 7 உடல்கள் மீட்கப்பட்டன. இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மண்ணுக்குள் சிக்கிய 21 பேரை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மழைப் பொழிவும் உள்ளதால் மீட்புப் பணி பகலில் மட்டும் தொடர்கிறது என்றார்.

விபத்து நடந்த இடம் நிலச்சரிவு அதிகம் நடக்க வாய்ப்புள்ள மலைப் பகுதி என்பதால், அங்கு வசிக்கும் மக்களை வேறு பகுதிக்கு மாற்ற நேபாள மறுசீரமைப்பு ஆணையம் பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேபாளத்தில் பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் நிலச்சரிவுகளால் கடந்த ஜூலை இறுதியில் 113 பேர் பலியாகி இருந்தனர். 67 பேர் காயமடைந்து இருந்தனர். 38 பேரை காணவில்லை என அந்நாட்டு உள்துறை அமைச்சக தெரிவித்தது நினைவுகூறத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here