எனக்கு அர்ஜுனா விருது கிடைக்கவே கிடைக்காதா?

2020-ம் ஆண்டுக்கான விளையாட்டுத் துறை விருதுகள் வென்ற வீரர், வீராங்கனைகளின் பட்டியல் இரு நாட்களுக்கு முன் வெளியானது. 5 பேருக்கு கேல் ரத்னா விருதும், 27 பேருக்கு அர்ஜுனா விருதும் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதில் அர்ஜுனா விருதில் மட்டும் சர்ச்சை எழுந்தது.

அர்ஜுனா விருதுக்கு 29 பேர் பரிந்துரைக்கப்பட்டு இருந்த நிலையில், ஏற்கனவே கேல் ரத்னா விருதை வென்ற மீராபாய் சானு மற்றும் சாக்சி மாலிக் பெயர்கள் மட்டும் நீக்கப்பட்டு இருந்தது. கேல் ரத்னா விருது, அர்ஜுனா விருதை விட உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மல்யுத்த வீராங்கனையான சாக்சி மாலிக் 2016 ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றார். 2017 காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றார். ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்றார். 2018 காமன்வெல்த் போட்டியில் வெண்கலம் வென்றார்.

அவரது சாதனைகளை பாராட்டி அவருக்கு கேல் ரத்னா விருது மற்றும் பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் 2020-ம் ஆண்டுக்கான அர்ஜுனா விருதுக்கு தன் பெயர் பரிந்துரை செய்யப்பட்டும், இறுதிப் பட்டியலில் நீக்கப்பட்டது குறித்து அவர் ஏமாற்றம் அடைந்துள்ளார்.

இந்த நிலையில், சாக்சி மாலிக் தனக்கு அர்ஜுனா விருது கிடைக்கவே கிடைக்காதா? என பிரதமர் நரேந்திர மோடி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு-விடம் கேள்வி எழுப்பி பரபரப்பை கிளப்பி உள்ளார்.

டுவிட்டரில், ‘‘எனக்கு கேல் ரத்னா விருது அளிக்கப்பட்டது பெருமையாக உள்ளது. ஒவ்வொரு விளையாட்டு வீரரும் அனைத்து விருதுகளையும் வெல்ல வேண்டும் என்று நினைப்பார்கள். அதற்காக தங்கள் வாழ்வை அவர்கள் பணயம் வைக்கிறார்கள். நான் கூட என் பெயர் அர்ஜுனா விருதுப் பட்டியலில் இடம்பெறும் என கனவு காண்கிறேன்’’ என்று கூறி உள்ளார்.

மேலும், ‘‘இன்னும் என்னென்ன பதக்கங்கள் என் நாட்டுக்காக நான் வென்றால் எனக்கு அர்ஜுனா விருது கிடைக்கும்? அல்லது இந்த மல்யுத்த வாழ்க்கையில் எனக்கு இந்த விருதை வெல்லும் அதிர்ஷ்டமே இல்லையா?’’ என அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here