லடாக் எல்லை நிலவரம் குறித்து ராஜ்நாத் சிங் ஆய்வு

இந்தியா-சீனா இடையே மோதல் ஏற்பட்ட லடாக் எல்லை நிலவரம் குறித்து ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று ஆய்வு செய்தார். இது தொடர்பாக டெல்லியில் அவர் முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

லடாக்கின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் சீன ராணுவம் ஊடுருவியதால் கடந்த ஜூன் மாதம் கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இருநாடுகளும் அடுத்தடுத்து நடத்தி வரும் அமைதி பேச்சுவார்த்தையில் கிழக்கு லடாக் எல்லையில் இருந்து படைகளை விலக்குவது என முடிவு செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி கடந்த மாதம் 6-ந் தேதி முதல் அங்கு படை விலக் கும் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. இதில் கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட சில பகுதிகளில் இருந்து மட்டுமே சீனா தனது படைகளை திரும்ப பெற்றது. ஆனால் பங்கோங்சோ, தேப்சாங் உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் சீன படைகள் நிறுத்தப்பட்டு உள்ளன.

இது இந்தியாவுக்கு அதிருப்தியை கொடுத்து உள்ளது. எனவே அங்கு படை விலக்கும் நடவடிக்கைகளை விரைவில் முடித்து, கடந்த ஏப்ரல் மாதம் வரை நிலவிய சூழலை எல்லை முழுவதும் திரும்ப கொண்டு வர வேண்டும் என இந்தியா வலியுறுத்தி வருகிறது. கடந்த 20-ந் தேதி கூட இருநாட்டு ராணுவ அதிகாரிகளும்பேச்சுவார்த்தை நடத்தி இருந்தனர்.

ஆனால் எல்லையில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட முடிவுகளை சீனா தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை என இந்திய ராணுவம் சமீபத்தில் கூறியுள்ளது.

இந்த நிலையில் லடாக் எல்லை நிலவரம் குறித்து ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று ஆய்வு செய்தார். டெல்லியில் நடந்த இந்த ஆய்வு கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படை தலைவர் பிபின் ராவத் மற்றும் முப்படை தளபதிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் லடாக் எல்லை பிரச்சினை தொடர்பான முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. குறிப்பாக எல்லையில் எதிர்காலத்தில் ஏற்படும் நிலவரங்களை எதிர்கொள்வது குறித்தும், இரு நாடுகளுக்கு இடையே நடைபெறும் பேச்சுவார்த்தைகள் குறித்தும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டதாக ராணுவ அமைச்சக வட்டாரங் கள் தெரிவித்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here