சின்சினாட்டி டென்னிஸ் – ஜோகோவிச் கால்இறுதிக்கு தகுதி

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-2, 6-4 என்ற நேர்செட்டில் டெனிஸ் சான்ட்கிரினை (அமெரிக்கா) தோற்கடித்து கால்இறுதியை எட்டினார். ஜோகோவிச் இந்த சீசனில் தொடர்ச்சியாக பெற்ற 20-வது வெற்றி இதுவாகும்.

மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 30-வது இடத்தில் இருக்கும் மிலோஸ் ராவ்னிக் (கனடா) 6-2, 6-2 என்ற நேர்செட்டில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான ஆன்டி முர்ரேவை (இங்கிலாந்து) வெளியேற்றி 5-வது முறையாக கால்இறுதிக்குள் நுழைந்தார். முர்ரேவிடம் இதற்கு முன்பு 8 முறை தோல்வி அடைந்த ராவ்னிக் அவருக்கு எதிராக பதிவு செய்த முதல் வெற்றி இதுவாகும். சிட்சிபாஸ் (கிரீஸ்), டேனில் மெட்விடேவ் (ரஷியா), கிராஜினோவிச் (செர்பியா), பாவ்டிஸ்டா அகுட் (ஸ்பெயின்) ஆகியோரும் கால்இறுதியை உறுதி செய்தனர்.

பெண்கள் ஒற்றையர் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 2 முறை சாம்பியனும், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையுமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 7-5, 6-7 (5-7), 1-6 என்ற செட் கணக்கில் கிரீஸ் மங்கை மரியா சக்காரியிடம் அதிர்ச்சிகரமாக தோற்று நடையை கட்டினார். 2 மணி 17 நிமிடம் நீடித்த இந்த ஆட்டத்தில் முதல் செட்டை வென்று 2-வது செட்டில் 5-3 என்ற கணக்கில் முன்னிலை வகித்த செரீனா தனது தவறான ஷாட்களால் சரிவை சந்தித்ததுடன், டைபிரேக்கரில் 4-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றும் செட்டை கைப்பற்றும் வாய்ப்பை கோட்டை விட்டார். கடைசி செட்டில் கால் வலியை சமாளித்து ஆடிய செரீனா எதிராளிக்கு ஈடுகொடுக்க முடியாமல் சரண் அடைந்தார்.

மற்றொரு ஆட்டத்தில் 11-ம் நிலை வீராங்கனை சபலென்கா (பெலாரஸ்) 2-6, 6-2, 3-6 என்ற செட் கணக்கில் தகுதி சுற்று மூலம் பிரதான சுற்றுக்கு வந்த அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலாவிடம் தோல்வி அடைந்து ஏமாற்றத்திற்கு உள்ளானார். அதே சமயம் நவோமி ஒசாகா (ஜப்பான்), ஜோஹன்னா கோன்டா (இங்கிலாந்து), அஸரென்கா (பெலாரஸ்), அனெட் கோன்டாவிட் (எஸ்தோனியா) உள்ளிட்டோர் தங்களது ஆட்டங்களில் வெற்றி கண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here