ஆனைகட்டி அருகே பெண் யானை பலி

60 வயது மதிக்கத்தக்க பெண் யானை பாதிரி மலை வனப்பகுதியில் உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம், மாங்கரை அடுத்த தூமனூர் பாதிரி மலை வனப்பகுதியில் மாடு மேய்க்கச் சென்ற பழங்குடியின மக்கள் யானை ஒன்று உயிரிழந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட வன அலுவலர் குருசாமி தபேலா மற்றும் மருத்துவர் சுகுமார் யானையை சென்று பார்த்தனர்.

பிறகு பரிசோதனை செய்த மருத்துவர் இந்த யானைக்கு 60 வயது இருக்கும் என்றும், இது உயிரிழந்து சில நாட்கள் ஆகியிருக்கலாம் என தெரிவித்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில் “இதே பகுதியில் கடந்த 18ம் தேதி குட்டியானை ஒன்று உயிரிழந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
அதற்கு அருகிலேயே இந்த யானை உயிரிழந்து இருப்பதால் அந்த குட்டி யானையின் தாயாக இருக்கலாம் என்றும், பிரசவத்தின் போது ஏற்பட்ட பிரச்சனையால் இன்று இந்த தாய் யானை உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இருப்பினும் யானையின் உயிரிழப்பு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்று கூறினார்.

பின்னர் யானையின் உடலானது பிரேத பரிசோதனை செய்யப்பட்டு ஊனுண்ணிக்காக வனப் பகுதியிலேயே விடப்பட்டுள்ளது. கோவை வன பகுதியில் பல்வேறு காரணங்களால் கடந்த எட்டு மாதங்களில் 19 யானைகள் உயிரிழந்துள்ளதாக வன ஆர்வலர்கள் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here