மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும்; ஏப்ரல் 19ம் தேதி முதற்கட்ட தேர்தல் – இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 19ம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தற்போதைய 17ஆவது நாடாளுமன்றத்தின் பதவி காலம் வரும் ஜூன் மாதம் 16ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன்னதாக புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு, புதிய அரசு பொறுப்பு ஏற்க வேண்டும்.

எனவே 18ஆவது நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை கடந்த ஆண்டு முதலே இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கிவிட்டது. ஒவ்வொரு மாநிலங்களுக்கும் தேர்தல் கமிஷனர்கள் சுற்றுப்பயணம் செய்து, தேர்தலை நடத்துவது குறித்து ஆய்வு நடத்தினர். அனைத்து அரசியல் கட்சியினரிடமும் கருத்துக்களை கேட்டறிந்தனர்.

இந்நிலையில், அனைத்து முன்னேற்பாடுகளும் முடிந்ததையடுத்து 18ஆவது நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

இந்த ஆண்டில் நடைபெறும் மிகவும் முக்கியமான செய்தியாளர்கள் சந்திப்பு இதுதான். இந்திய ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழாவான மக்களவை தேர்தலை நடத்த முழு அளவில் தயாராக உள்ளோம். வன்முறையின்றி அமைதியான முறையில் தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 11 மாநில தேர்தல்களும் வன்முறையின்றி அமைதியான முறையில் நடத்தப்பட்டுள்ளது. இதில் எங்கும் மறுவாக்குப்பதிவு நடைபெறவில்லை. வருங்காலங்களில் இந்த நடைமுறையை மேலும் முன்னேற்றுவோம்.

நடப்பு மக்களவை தேர்தலில் வாக்களிக்க தகுதியுள்ளோரின் எண்ணிக்கை 96.80 கோடியாக உள்ளது. 1.82 கோடி முதல்முறை வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். மொத்த வாக்காளர்களில் 49.70 கோடி பேர் ஆண்கள், 47.10 கோடி பேர் பெண்கள், 48 ஆயிரம் பேர் மூன்றாம் பாலினத்தவர்கள். 82 லட்சம் வாக்காளர்கள் 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆவர். ஏப்ரல் 1ம் தேதி 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் வரும் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் ஆவர்.

85 வயதிற்கு மேற்பட்டவர்கள் விரும்பும்பட்சத்தில் வீட்டில் இருந்தே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 10.50 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுள்ளன. வாக்குச்சாவடி மையங்களில் 1.50 கோடி பேர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 55 லட்சம் வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

நாடு முழுவதும் உள்ள சோதனைச்சாவடிகள் மூலம் கண்காணிப்பு நடத்தப்படும். டிரோன் மூலம் எல்லைகள் கண்காணிக்கப்படும். வாக்குக்கு பணம், பொருள் உள்ளிட்டவை அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பணப்பரிவர்த்தனை குறித்து அமலாக்கத்துறை, வருமானவரித்துறை கண்காணித்து வருகின்றன.

அரசியல் கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்கள் கண்ணியத்துடன் பரப்புரையில் ஈடுபட வேண்டும். மத, ஜாதி ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் விமர்சித்து பரப்புரையில் ஈடுபடக்கூடாது. தேர்தல் பரப்புரையில் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளை பயன்படுத்தக்கூடாது. வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசக்கூடாது.

நாடு முழுவதும் 2 ஆயிரத்து 100 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தலில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கு சம வாய்ப்பு அளிக்கப்படும். நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 19ம் தேதி முதற்கட்ட தேர்தல் நடைபெறும்’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here