கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஒரு கோடி ரூபாய் வசூல்

மாஸ்க் அணியாதவர்களிடமிருந்து ஒரு மாதத்தில் ஒரு கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளதாக அம்மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு கடந்த மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் மக்களின் நலனை கருத்தில் கொண்டு, தற்போது ஊரடங்கு தளர்வுகளை அந்தந்த மாநிலங்கள் அறிவித்து வருகின்றன. மேலும் கொரோனா பரவாமல் தடுக்க முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி, பாதுகாப்பு அம்சங்கள் அடங்கிய வழிகாட்டு நடைமுறைகள் கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இதனை நடைமுறைப்படுத்தும் வகையில், பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் வருபவர்களிடம் அபராதம் விதிப்பது, பொது இடங்களில் எச்சில் துப்பினால் சிறைத்தண்டனையுடன் கூடிய அபராதம், சமூக இடைவெளி விதியை மீறினால் கடைகளுக்கு அபராதம் மற்றும் சீல் வைப்பது உள்ளிட்ட அபராதமுறைகள் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த சூழலில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் புனேவில் பொது இடங்களில் மாஸ்க் அணியாதவர்கள் மற்றும் எச்சில் துப்பியவர்களிடமிருந்து ஒரு கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக புனே மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

புனே மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் தேஷ்முக்கின் ஆணைக்கு இணங்க போலீசார் கொள்ளை நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் அரசின் அறிவுறுத்தலை கடைபிடிக்காதவர்களிடமிருந்து அபராத தொகையை வசூலித்துள்ளனர்.ஹவேலி மற்றும் இந்தாபூர் பகுதியில் உள்ள கிராம பஞ்சாயத்துகளில் தான் அதிகளவில் அரசின் விதியை பின்பற்றாதமைக்காக அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here