சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு- சரத் பவார்

ஹிந்தி இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கு, இப்போது சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இன்னொரு பக்கம், நடிகரின் பணம் எங்கே போனது என, அமலாக்கத் துறை விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறது.இந்நிலையில், இந்த வழக்கில், போதைப் பொருள் தடுப்பு அமைப்பும் விசாரணையில் இறங்கியுள்ளது. சுஷாந்த் சிங்குடன் சில காலம் நெருக்கமாக இருந்த நடிகை ரியா சக்கரவர்த்தியின் சகோதரர், போதைப் பொருள் தடுப்பு அமைப்பால் கைது செய்யப்பட்டுள்ளார்.இது, மஹாராஷ்டிர அரசியலில் பீதியைக் கிளப்பியுள்ளது.

இதுவரை முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகனும், அமைச்சருமான ஆதித்ய தாக்கரேவிற்கு, சுஷாந்த் இறப்பில் சம்பந்தம் உள்ளது என, செய்தி அடிபட்டது. இப்போது விசாரணை வேறு விதமாக செல்கிறது. நடிகர்கள் போதை வஸ்துக்களை பயன்படுத்துகின்றனர், அதனால், சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்கிற கோணத்தில் விசாரணை தொடர்கிறது.இந்த வழக்கில், துவக்கத்தில், ரியா சக்கரவர்த்திக்கு ஆதரவாக பேசி வந்தார் சரத் பவார். ஆனால் இப்போது போதைப் பொருள் விஷயம் வந்துவிட, கூட்டணி ஆட்சிக்கு பாதிப்பு வருமோ என, அவர் பயப்படுகிறாராம்.

போதைப் பொருள் விவகாரத்தில் பல முக்கிய அரசியல்வாதிகள் சிக்குவார்கள்; சினிமாவும் போதையும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன என, தனக்கு நெருக்கமானவர்களிடம், தன் ஆதங்கத்தைச் சொல்லியிருக்கிறார் பவார்.கர்நாடகாவிலும், ஒரு நடிகை, போதைப் பொருள் விவகாரத்தில் கைதாகியுள்ள நிலையில், இந்த விசாரணை, தமிழக சினிமா உலகத்தையும் விட்டுவைக்காது என்கின்றனர் விஷயம் தெரிந்தவர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here