போதைப் பொருள் வழக்கு விசாரணையின்போது, நடிகையர் தீபிகா படுகோனே, ரகுல் ப்ரீத் சிங் மற்றும் சாரா அலி கானின் மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கை, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இதில், புதிய திருப்பமாக, சுஷாந்திற்கு, போதைப் பொருட்கள் கொடுக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, என்.சி.பி., எனப்படும், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு ஆணையம், இதை விசாரிக்கத் துவங்கியது. சுஷாந்தின் காதலி ரியா மற்றும் அவருக்கு நெருக்கமான ஜெயா சாஹாவிடம் விசாரணை நடத்தப்பட்டபோது, நடிகையர் தீபிகா படுகோனே, ஷ்ரத்தா கபூர், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் சாரா அலிகானின் பெயர்கள் அடிபட்டன. இவர்கள், போதைப் பொருள் பயன்படுத்தியதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, அவர்களுக்கு, ‘சம்மன்’ அனுப்பப்பட்டது. வாக்குமூலம்இதற்கிடையே, ரகுல் ப்ரீத் சிங் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த, 25ம் தேதி, ரகுல் ப்ரீத் சிங், என்.சி.பி., அதிகாரிகள் முன் ஆஜரானார்.
அதில், தன் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள், ரியாவிற்கு சொந்தமானது என, அவர் அளித்த வாக்குமூலம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.நேற்று முன்தினம், நடிகையர் தீபிகா படுகோனே, சாரா அலிகான் மற்றும் ஷ்ரத்தா கபூரும், என்.சி.பி., ஆணையத்தில் ஆஜராகினர். அவர்களிடம், சுஷாந்த் மரணம், போதைப் பொருள் பயன்பாடு உள்ளிட்டவை குறித்து, விசாரணை நடத்தப்பட்டது. தீபிகா படுகோனேவிடம் நடந்த ஆறு மணிநேர விசாரணையின்போது, அவரது மேலாளர் கரிஷ்மா பிரகாஷும் உடனிருந்தார். இந்நிலையில், விசாரணையின்போது, தீபிகா படுகோனே, ரகுல் ப்ரீத் சிங், சாரா அலி கான் உள்ளிட்டோரின் மொபைல் போன்களை, என்.சி.பி., அதிகாரிகள் பறிமுதல் செய்தது, தற்போது தெரியவந்துள்ளது. இவர்கள் மட்டுமல்லாமல், ஜெயா சாஹா, ஆடை வடிவமைப்பாளர் சிமோன் கம்பாட்டாவின் போன்களும் பறிமுதல் செய்யப்பட்டு, தடயவியல் பரிசோதனைக்காக, அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. திடுக்கிடும் தகவல் இதில் உள்ள தகவல்கள் மீட்கப்பட்டால், சுஷாந்த் சிங் மரணம், போதைப் பொருள் பயன்பாடு குறித்த மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, இந்த வழக்கில், ஊடகங்களின் தலையீட்டை தடுக்கக்கோரி, ரகுல் ப்ரீத் சிங், டில்லி உயர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.