சானிடைசர் தரமானதா என எப்படி கண்டுபிடிப்பது?

லாபம் சம்பாதிக்கும் நோக்கில் மட்டுமே சில நிறுவனங்கள் இந்தச் சந்தையில் வியாபாரத்தைத் தொடங்கியுள்ளன என்றும், அவர்களுடைய பொருள்கள் உரிய தரத்தில் இல்லை என்றும் அந்தச் சங்கம் கண்டறிந்துள்ளது.

கிருமிநாசினி பயன்படுத்துவது என்பது நம் வாழ்வில் ஓர் அங்கமாக மாறிவிட்டது. கொரோனாவுக்கு எதிரான போரில் நமக்கு பாதுகாப்புக் கேடயம் போல கிருமிகளை நீக்கும் இந்தக் கிருமிநாசினிகளைப் பயன்படுத்துகிறோம். நம் பணியிடத்திலோ அல்லது பயணத்திலோ இதைப் பயன்படுத்துகிறோம். கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், கிருமிநாசினிகளுக்கான தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு சில நிறுவனங்கள் இந்த வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளன. எனவே, கிருமிநாசினி என்ற பெயரில் சில போலி பொருட்களும் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளன.

சந்தையில் விற்கப்படும் சில கிருமிநாசினிகள் “99.9 சதவீத வைரஸ்களை கொல்லும்,” “மணத்துடன் கூடிய கிருமிநாசினி”, “ஆல்கஹால் மூலப்பொருளின் அடிப்படையிலான கிருமிநாசினி” என்றெல்லாம் விளம்பரங்களுடன் வருகின்றன.

கொரோனா வைரஸ் தாக்காமல் பாதுகாப்பு கிடைப்பதை உறுதி செய்வதற்கு ஆல்கஹால் மூலப்பொருளின் அடிப்படையிலான கிருமிநாசினிகளை பயன்படுத்துவதற்கு நாம் எல்லோரும் முன்னுரிமை தருகிறோம்.

ஆனால் நீங்கள் சரியான கிருமிநாசினியைத்தான் பயன்படுத்துகிறீர்களா? அந்தக் கிருமிநாசினிகளில் பக்கவிளைவுகள் ஏதும் இருக்கின்றனவா? இந்தக் கிருமிநாசினிகள் உங்கள் தோலுக்கு உகந்ததாக இருக்குமா? தரம் குறைந்த மற்றும் கலப்படமான கிருமிநாசினிகள் சந்தையில் கிடைப்பதால், இவையெல்லாம் முக்கியமான கேள்விகளாக உள்ளன.

நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்குடன் செயல்பட்டு வரும் இந்திய நுகர்வோர் வழிகாட்டுதல் சங்கம் இதுகுறித்து ஓர் ஆய்வு நடத்தியுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட சாம்பிள்களில் 50 சதவீதத்துக்கும் மேலானவை கலப்படமானதாக இருப்பதாக அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சானிடைசர் ஆய்வு என்ன சொல்கிறது?

  • 122 கிருமிநாசினி சாம்பிள்கள் பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
  • 45 சாம்பிள்கள் கலப்படமானவை என கண்டறியப்பட்டது.
  • மனிதர்களுக்கு ஊறு விளைவிக்கக் கூடிய மெத்தனால் ஐந்து சாம்பிள்களில் இருப்பது தெரிய வந்துள்ளது.
  • 59 சாம்பிள்களில் மட்டுமே அவற்றின் மீது ஒட்டியுள்ள லேபிள்களில் உள்ளவாறு பொருட்கள் சேர்க்கப் பட்டுள்ளன.

“சந்தையில் இருந்து பெறப்பட்ட 120 சாம்பிள்களில் வாயு நிறப்பிரிகை பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 45 சாம்பிள்கள் கலப்படமானவை என கண்டறியப்பட்டது. அதாவது அதன் லேபிள் மீது குறிப்பிட்டுள்ளவாறான, பொருட்கள் அதில் சேர்க்கப்படவில்லை” என்று இந்திய நுகர்வோர் வழிகாட்டுதல் சங்கத்தின் தலைவர் டாக்டர் எம்.எஸ். காமத் பிபிசியிடம் தெரிவித்தார்.

“ஐந்து சாம்பிள் கிருமிநாசினிகளில் மெத்தைல் உள்ளது என்பதுதான் மிகவும் அபாயகரமானது. மெத்தைல் ஆல்கஹால் பயன்பாட்டுக்குத் தடை உள்ளது. ஆனால் வெளிப்படையாக இந்தக் கிருமிநாசினிகளில் உள்ளது. மக்களின் ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவிக்கும் மெத்தைல் ஆல்கஹால் மூலப் பொருள் அடிப்படையில் கிருமிநாசினிகள் தயாரிக்கப் படுகின்றன. இவை பிராண்ட் அங்கீகாரம் பெற்ற பெயர்களில் விற்கப்படுகின்றன” என்று காமத் கூறினார்.

மெத்தைல் ஆல்கஹால் என்பது என்ன?

மெத்தைல் ஆல்கஹால் விஷத்தன்மை கொண்ட ஒரு பொருள் என்று அமெரிக்காவைச் சேர்ந்த நோய்க் கட்டுப்பாட்டு மையம் (சிடிசி) கூறியுள்ளது. அது தோல், கண்கள், நுரையீரல் ஆகியவற்றில் காயங்களை ஏற்படுத்தலாம். அதைத் தொடுபவர்கள் இந்த பாதிப்புக்கு ஆளாவார்கள். அவர்கள் மீது அதுவாகப் பட்டாலும் இந்த பாதிப்பு ஏற்படும். பிளாஸ்டிக், பாலிஸ்டர் மற்றும் கரைப்பான்கள் தயாரிப்பில் இது பயன்படுத்தப் படுகிறது.

தோலில் மெத்தைல் ஆல்கஹால் கிரகிக்கப்பட்டு, காயத்தை ஏற்படுத்தும். கண்களில் பட்டால், கண்களில் பாதிப்பு ஏற்படும். வாந்தி, தலைவலி ஆகிய பாதிப்புகளும் ஏற்படும். தொடர்ந்து அதை தொட வேண்டிய சூழலில் இருப்பவர்களுக்கு மரணமும்கூட ஏற்படலாம்” என்று டாக்டர் காமத் எச்சரித்துள்ளார்.

“கிருமிநாசினிகளுக்கு தேவை அதிகரித்திருப்பதால், குறுகிய காலத்தில் நிறைய லாபம் சம்பாதித்துவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் பல நிறுவனங்கள் போலி கிருமிநாசினிகளை விற்க முயற்சிக்கின்றன. அவை தோலுக்கு ஊறு விளைவிக்கும். எனவே எந்தக் கடையில் இருந்து கிருமிநாசினி வாங்கினாலும், வாடிக்கையாளர்கள் சிறப்பு முன்னெச்சரிக்கைகளை பின்பற்ற வேண்டும்,” என்று The Aesthetic Clinics உடன் தொடர்புடைய அழகியல் தோல் சிகிச்சை நிபுணரான டாக்டர் ரின்கி கபூர் கூறுகிறார்.

கிருமிநாசினிகள் விஷயத்தில் அரசின் பங்கு

“தரம் குறைந்த கிருமிநாசினியைப் பயன்படுத்துவது தவறு. கிருமிநாசினிகளுக்கான பார்முலாவை உலக சுகாதார நிறுவனம் அளித்துள்ளது. அதன்படிதான் அவற்றைத் தயாரிக்க வேண்டும். எத்தனால் அளவை குறைத்தால் அது சரியாக வராது. சம்பந்தப்பட்ட இடங்களில் திடீர் பரிசோதனைகள் நடத்தி, போலி கிருமிநாசினிகள் விற்பனை தடுக்கப்படும். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க உணவு மற்றும் ரசாயன மருந்துகள் நிர்வாகத் துறைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது” என்று மகாராஷ்டிரா மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் டோப்பே பிபிசி மராத்தி செய்தியாளரிடம் கூறினார்.

“எங்கள் ஆய்வு குறித்து மத்திய அரசு கவனம் செலுத்தியுள்ளது. அனைத்துத் தகவல்களையும் அனுப்புமாறு எங்களை அரசு கேட்டுக் கொண்டுள்ளது. எங்கள் அறிக்கையை உணவு மற்றும் ரசாயன மருந்துகள் நிர்வாகத் துறைக்கு நாங்கள் சமர்ப்பித்துள்ளோம். இந்த விஷயத்தில் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இது மக்களின் ஆரோக்கியம் சம்பந்தப்பட்டது” என்று டாக்டர் காமத் கூறினார்.

“உலக சுகாதார நிறுவனம் மற்றும் மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி, கிருமிநாசினிகளில் மணம் இருக்கக் கூடாது. கிருமிநாசினியின் வீரியம் காலாவதியாகும் தேதியை தெளிவாகக் குறிப்பிட வேண்டும். உற்பத்தியாளர் உரிமத்தின் எண் தெளிவாகத் தெரியும்படி இருக்க வேண்டும். அதன் pH அளவு 6 – 8 ஆகியவற்றுக்கு இடையே இருக்க வேண்டும். நுண்ணுயிரிகள் அழிப்புத் திறன் சுமார் 99.9 சதவீதம் இருக்க வேண்டும்” என்று டாக்டர் கபூர் தெரிவித்துள்ளார்.

எந்தக் கிருமிநாசினி வாங்குவது?

“கிருமிநாசினி வாங்கும் போது மக்கள் தேவையான முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்ற வேண்டும். 70 சதவீதத்துக்கும் அதிகமான எத்தில் ஆல்கஹால் இருக்கும் கிருமிநாசினி நல்லது. பல சமயங்களில் ஆல்கஹால் கைகளை உலரச் செய்துவிடும். எனவே கிளிசரின் உள்ள கிருமிநாசினி சரியாக வேலை செய்யும். மேலும், ஒவ்வாமை அறிகுறி உள்ளவர்கள் மணம் உள்ள கிருமிநாசினிகளைப் பயன்படுத்தாமல் தவிர்க்க வேண்டும்” என்று மும்பையை சேர்ந்த தோல் சிகிச்சை நிபுணர் டாக்டர் பிந்து ஸ்தலேகர் பிபிசியிடம் கூறினார்.

எந்த கிருமிநாசினி நல்லது, எது கெட்டது என கண்டுபிடிப்பது எப்படி?

“ஒரு கிருமிநாசினி பயன்பாட்டுக்கு பொருத்தமானதா இல்லையா என்பதை நீங்களே கண்டுபிடிக்கலாம். இதற்கு ஒரு ஸ்பூன் கோதுமை மாவு எடுத்து, அதில் கிருமிநாசினியை சேர்க்க வேண்டும். மாவு ஒட்டும் தன்மைக்கு மாறினால், அந்தக் கிருமிநாசினி நல்லதல்ல. மாவு உலர்வாகவே இருந்தால், கிருமிநாசினி பயன்பாட்டுக்கு பொருத்தமானது” என்று டாக்டர் கபூர் தெரிவித்தார்.

ஆராய்ச்சியாளர்களுக்கு மிரட்டல்

“கிருமிநாசினிகள் குறித்து நாங்கள் அறிக்கை அளித்த பிறகு எனக்கு 4 – 5 தொலைபேசி மிரட்டல்கள் வந்தன. இதுபோன்ற ஆராய்ச்சிகள் செய்யும்போது மிரட்டல்கள் வருவது வழக்கம்தான். அவதூறு வழக்கு தொடரப் போவதாக அவர்கள் மிரட்டினார்கள். நாங்கள் தவறான தகவல்களைக் கூறியுள்ளதாகவும், அதற்கு நாங்கள் விளக்கம் தர வேண்டும் என்றும் கூறினார்கள். அதுபோல எங்களுக்கு பல மிரட்டல்கள் வருகின்றன. ஆனால் இவை எவற்றுக்கும் பயப்படாமல் நாங்கள் மக்களுக்காக உழைக்கிறோம்” என்று டாக்டர் காமத் கூறினார்.

என்ன முன்னெச்சரிக்கை தேவை?

  • ஆல்கஹால் அல்லாத பொருட்கள் கோவிட்-19க்கு எதிரான செயல்பாட்டில் பயனற்றவை.
  • கிருமிநாசினிகளை குழந்தைகளின் கைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்கவும்.
  • ஊசிமருந்துகள் விஷத்தன்மை பாதிப்பை ஏற்படுத்தும்.
  • கடைகளில் நேரடியாகக் கேட்டு வாங்கும் பொருளாக் கிருமிநாசினிகள் இருப்பதால் அதைத் தயாரித்த கம்பெனி பெயர், கிருமிநாசினி காலாவதி தேதி ஆகியவற்றை கவனிக்க வேண்டும்.
  • கிருமிநாசினியை வாங்குவதற்கு முன், அதன் மீது அச்சிட்டுள்ள அறிவுறுத்தல்களை மக்கள் கவனமாகப் படிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here