திருப்பதி தேவஸ்தான கோவிட் மருத்துவமனையின் மேற்கூரை இடிந்து விழுந்ததில், அங்கு செவிலியராக பணியாற்றி வந்த6 மாத கர்ப்பிணி உயிரிழந்தார்.
திருப்பதியில் தேவஸ்தானத்துக்கு சொந்தமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவ அறிவியல் நிறுவனம் இயங்கி வருகிறது. அங்குள்ள பத்மாவதி கோவிட் மையத்தில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க ப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக் கட்டிடம் 8 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். கட்டிடத்தின் மேற்பகுதியில் தற்போது மேலும் ஒரு அடுக்கு புதியதாக கட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த மருத்துவமனையின் மேற்கூரையின் ஒரு பகுதி நேற்று அதிகாலை சுமார் 2 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில், தலையில் பலத்த காயமடைந்த செவிலியர் ராதிகா (26) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர்6 மாதம் கர்ப்பமாக இருந்திருக்கிறார். மேலும் இதில் படுகாயமடைந்த 2 கரோனா நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் நானி உத்தரவிட்டுள்ளார். மேலும், உயிரிழந்த ராதிகாவின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், படுகாயமடைந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2லட்சம் வழங்கப்படும் எனவும்அமைச்சர் அறிவித்தார்.
இதனிடையே, மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியப்போக்கின் காரணமாகவே, செவிலியர் ராதிகா உயிரிழந்ததாக பாஜக,கம்யூனிஸ்ட் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.