தட்டிகேட்ட கணவர் வெட்டிக்கொலை !

திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை அருகே உக்காடு தென்பரை கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். டிராக்டர் ஒட்டுனராக இவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் ரமேஷின் மனைவியை எதிர் வீட்டில் வசிக்கும் அன்புதாசன் என்பவர் குடிபோதையில் தரக்குறைவாக பேசியதாக தெரிகிறது. அப்போது வீட்டில் இருந்த ரமேஷ் அன்புதாசனிடம் சென்று அவதூறாக பேசக்கூடாது என தட்டிக்கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றியதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பு உருவானது. இதனால் ஆத்திரம் அடைந்த அன்புதாசன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து ரமேஷை குத்தியதாக கூறப்படுகிறது. இதில் அதிகளவு ரத்தம் வெளியேறி ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனை கண்ட அவரது மனைவி மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து திருமக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்த போலீசார் ரமேஷின் உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதனிடையே, அன்புதாசன் வேதாரண்யம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். நீதிமன்றத்தில் சரணடைந்த அன்புதாசனை வரும் அக்டோபர் 22 ஆம் தேதி வரை திருத்துறைப்பூண்டி சிறையில் அடைக்க நீதிபதி லிசி உத்தரவிட்டார்.

இதனையடுத்து பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here