அமெரிக்காவில் டிரம்ப் பிரசாரத்தில் கமலா பெயர் தவறாக உச்சரிப்பு

அதிபர் டிரம்ப்பின் பிரசாரத்தில் செனட் எம்பி ஒருவர் கமலா ஹாரிசின் பெயரை தவறாக உச்சரித்ததால், டிவிட்டரில் அவரது ஆதரவாளர்கள் கொந்தளித்துள்ளனர். அமெரிக்காவில் அடுத்த மாதம் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சி வேட்பாளரான அதிபர் டிரம்ப்பை எதிர்த்து ஜனநாயக கட்சியின் ஜோ பிடென் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸ் களமிறக்கப்பட்டு உள்ளார். தேர்தல் நெருங்கும் நிலையில், இரு தரப்பிலும் பிரசாரம் அனல் பறக்கிறது.

இந்நிலையில், ஜார்ஜியாவின் மேகான் நகரில் நேற்று முன்தினம் நடந்த அதிபர் டிரம்ப் பிரசாரத்தில் பேசிய குடியரசு கட்சி செனட் எம்பி.யான டேவிட் பெர்டியு, ‘‘அதென்ன க-ம-லா? காஹ்-மாஹ்-ல? கமலா மாலா  மலா? அடப் போங்கய்யா எப்படின்னு தெரியல? ஏதோ ஒன்னு இருந்துட்டு போகட்டும்…’’ என ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் கிண்டலடித்து பேசினார். இது கமலா ஹாரிஸ் ஆதரவாளர்கள், குறிப்பாக இந்திய வம்சாவளிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அமித் ஜானி என்பவர் ‘மை நேம் இஸ்’ என டிவிட்டரில் ஹேஷ்டேக் தொடங்கி, ‘இது சகிப்பின்மையை எதிர்த்து விரட்டி அடிக்கும் பிரசாரம்’ என திரியை கொளுத்தி போட்டார்.

அதைத் தொடர்ந்து ‘ஐஸ்டேன்ட்வித்கமலா’ என்றொரு ஹேஷ்டேக்கும் பிரபலமானது. இவற்றில் பலரும் தங்கள் பெயரையும், அதற்கான விளக்கத்தையும் பதிவிட்டு, செனடர் பெர்டியுவுக்கு பதிலடி தந்தனர். இந்த ஆன்லைன் பிரசாரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here