இம்ரானுக்கு நெருக்கடி; காய்ச்சி எடுத்த எதிர்க்கட்சிகள்

பாகிஸ்தானில், பிரதமர் இம்ரான் கான் அரசுக்கு எதிராக நடந்த கண்டன பொதுக் கூட்டத்தில், பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவர்கள், அவரது அரசை கடுமையாக விமர்சித்தனர்.நம் அண்டை நாடான பாகிஸ்தானில், பிரதமர் இம்ரான் கான் அரசுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன.

‘பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம்’ என்ற அமைப்பை, 11 பிரதான எதிர்க்கட்சிகள் சேர்ந்து உருவாக்கின. ‘இம்ரான் அரசில் ஊழல் அதிகரித்து விட்டது. அரசு நிர்வாகத்தில் ராணுவத்தின் தலையீடு அதிகரித்துள்ளது’ எனக் கூறி, அரசுக்கு எதிராக, போராட்டங்கள் மற்றும் பேரணிகளை, இந்த அமைப்பு தொடர்ந்து நடத்தி வருகிறது.

கராச்சியில், நேற்று முன்தினம் இரவு, பிரமாண்ட பொதுக்கூட்டம் நடந்தது.அதில், பாக்., மக்கள் கட்சித் தலைவர் பிலாவல் சர்தாரி, நவாஸ் ஷெரீப்பின், பாக்., முஸ்லிம் லீக் கட்சியின் துணை தலைவர்கள் மரியம் நவாஸ், ஷாஹித் கக்கான் அப்பாஸி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதில், லண்டனில் இருந்து, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பேசிய நவாஸ் ஷெரீப் கூறுகையில், ”இம்ரான் கான் தலைமையிலான கைப்பாவை அரசு அமைந்ததற்கு பின்னணியில், பாக்., ராணுவம் மற்றும் உளவுத் துறையும் உள்ளன,” என்றார்.

இதையடுத்து, பிலாவல் சர்தாரி கூறுகையில், ”இந்த திறமையற்ற பிரதமர், வீட்டிற்கு செல்ல வேண்டும். சர்வாதிகாரிகளால் உயிர்வாழ முடியாது என்பதை, வரலாறு நிரூபித்திருக்கிறது,” என்றார்.இதன்பின் பேசிய நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ் கூறியதாவது:இம்ரான் கான் அரசிடம் கேள்விகளை கேட்டால், எங்களை துரோகிகள் என்கின்றனர். அரசின் தோல்விகளை மறைக்க, ராணுவத்தை பயன்படுத்தும் இம்ரான் கான், ஒரு கோழை.

ராணுவத்தை இழிவுபடுத்தும் உரிமையை, அவருக்கு கொடுத்தது யார்? எங்களை எளிதில் அச்சுறுத்திவிடலாம் என நினைக்க வேண்டாம். இவ்வாறு, அவர் கூறினார்.எதிர்க்கட்சிகளின் தீவிரமான போராட்டத்தால், இம்ரான் கான் தலைமையிலான அரசுக்கு, நெருக்கடி அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here