நடுவானில் தூங்கிய ‘பாத்தேக் ஏர்’ விமானிகள் ; விசாரணையை ஆரம்பித்தது இந்தோனேசியா

ஜகார்த்தா:

விமானப் பயணத்தின்போது இரு விமானிகள் தூங்கிவிட்டது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, ‘பாத்தேக் ஏர்’ உள்ளூர் விமான நிறுவனத்திடம் விசாரணை நடத்தப்போவதாக இந்தோனேசியப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி 25ஆம் தேதி தென்கிழக்கு சுலாவேசியில் இருந்து தலைநகர் ஜகார்த்தாவுக்குச் சென்றுகொண்டிருந்த அந்த விமானத்தில், விமானியும் இணை விமானியும் ஒரே நேரத்தில் 28 நிமிடங்களுக்கு உறங்கிவிட்டது கண்டறியப்பட்டதாக தேசிய போக்குவரத்துப் பாதுகாப்புக் குழுவின் முதற்கட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

அந்தச் சம்பவத்தின் காரணமாக அந்த விமானத்தின் பயணப்பாதையில் கோளாறு ஏற்பட்டது. எனினும், விமானத்தில் இருந்த 153 பயணிகளும் விமானச் சிப்பந்திகள் நால்வரும் பாதுகாப்பாக இருந்தனர். ஆனால் அவர்களின் துக்கம் காரணமாக குறித்த விமானப் பயணம் இரண்டரை மணி நேரம் நீடித்தது.

அச்சம்பவம் தொடர்பில் ‘பாத்தேக் ஏர்’ நிறுவனத்தைப் போக்குவரத்து அமைச்சு கடுமையாகச் சாடுவதாக விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநர் எம்.கிரிஸ்தி எண்டா முர்னி கூறினார்.

விமானப் பணியாளர்களின் ஓய்வு நேரத்தில் கூடுதல் கவனம் செலுத்துமாறு விமான நிறுவனங்களுக்கு அவர் அறைகூவல் விடுத்தார்.

இந்நிலையில், ஜனவரி 25ஆம் தேதி சம்பவத்துடன் தொடர்புடைய விமானிகள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ‘பாத்தேக் ஏர்’ வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here