கொரோனா தடுப்பூசியை வழங்க 3 சிறப்பு குழுக்களை அமைக்க வேண்டும்

கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு முயற்சிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அவை பயன்பாட்டுக்கு வந்ததும், அனைத்து மக்களுக்கும் வழங்கப்படுவதை உறுதி செய்ய தேவையான முன்னேற்பாடுகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதுதொடர்பாக மத்திய சுகாதார துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கான முன்னேற்பாடுகளை கவனிக்கவும், செயல் திட்டங்களை வகுக்கவும், மாநிலங்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகளை சமாளிக்கவும் தேவையான யுக்திகளை வகுக்கவும் அனைத்து மாநில அரசுகளும் குழுக்களை அமைக்க வேண்டும்.

* ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த தலைமைச் செயலாளர் தலைமையில் மாநில கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும்.
* கூடுதல் தலைமை செயலாளர் அல்லது முதன்மை செயலாளர் தலைமையில் மாநில செயல் குழு அமைக்கப்பட வேண்டும்.
* மேலும், கலெக்டர்கள் தலைமையில் மாவட்ட குழுக்களும் அமைக்கப்பட வேண்டும்.
– இக்குழுவினர் மற்ற அனைத்து துறையினருடன் ஒருங்கிணைந்து கொரோனா தடுப்பூசியை அனைத்து மக்களுக்கும் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்.

தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டு ஓராண்டுக்கு, சுகாதாரத் துறையினரிடமிருந்து தொடங்கி பல பிரிவினரும் பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். எனவே, அவர்களை ஒருங்கிணைக்க சிறப்பு குழுக்களின் தேவை அவசியமாகும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் புரளி பரவாமல் தடுங்கள்
ராஜேஷ் பூஷண் தனது கடிதத்தில் மேலும், ‘சமூக வலைதளங்கள் மற்றும் பிற தளங்களில் கொரோனா தடுப்பூசிகள் பற்றி புரளிகள், எதிர்மறையான விஷயங்கள் பரப்புவதை ஆரம்பத்தில் இருந்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற புரளிகள், பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ளுவதை பாதிக்கும்,’ என கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here