ஓடிடி தளங்களில் எந்தெந்த தமிழ் படங்கள் ரிலீஸ்?

கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த திரையரங்குகளை நவம்பர் 10ஆம் தேதி திறக்க தமிழக அரசு அனுமதியளித்துவிட்டாலும் ஓடிடி தளங்களில்தான் அதிக படங்கள் வெளியாகுமெனத் தெரிகிறது.

திரையரங்குகளைத் திறக்க தமிழக அரசு அனுமதியளித்துவிட்டாலும் விபிஎஃப் பிரச்சனை காரணமாக திரையரங்கள் குறிப்பிட்ட தேதியில் திறக்கப்படுமா என்ற சந்தேகம் நிலவுகிறது. அப்படியே பத்தாம் தேதி திறக்கப்பட்டாலும் தீபாவளிக்கு படங்கள் வெளியாவதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

ஆகவே இந்த ஆண்டைப் பொறுத்தவரை, சினிமா ரசிகர்கள் ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்களைப் பார்த்து ரசிக்க வேண்டிய நிலைதான். இந்த ஆண்டு தீபாவளியை ஒட்டி மூன்று குறிப்பிடத்தக்க திரைப்படங்கள் வெளியாகுமெனத் தெரிகிறது.

1. சூரரைப் போற்று

சூர்யா நடிக்க 2D என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் இது. ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் கோபிநாத்தின் வாழ்வை மையப்படுத்தி உருவான படம் இது. இதில் நெடுமாறன் ராஜாங்கம் என்ற பாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். நடிகை அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்க அவருடன் கருணாஸ், மோகன் பாபு, காளி வெங்கட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ஜி.வி. பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படம் அமேசான் பிரைம் மூலம் நவம்பர் 12ஆம் தேதி வெளியாகிறது.

2. மூக்குத்தி அம்மன்

பிரபல வானொலி தொகுப்பாளராக இருந்து, சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, LKG படத்தின் மூலம் ஹீரோவாக வளர்ந்து நிற்பவர் RJ பாலாஜி. LKG திரைப்படம் குறிப்பிடத்தக்க வரவேற்பை பெற்ற நிலையில், அவர் முக்கியப் பாத்திரத்தில் நடித்து வெளியாகவிருக்கும் அடுத்த படம், மூக்குத்தி அம்மன்.

இந்தப் படத்தை RJ பாலாஜி, NJ சரவணன் உடன் இணைந்து இயக்கியுள்ளார். இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் பேனரில் ஐசரி கணேஷ் தயாரித்திருக்கிறார். நயன்தாரா முதன்மை பாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் ஊர்வசி, மௌலி, அஜய் கோஷ், ஸ்ருதி வெங்கட், மது, அபிநயா, மனோபாலா, மயில்சாமி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இந்தப் படம் டிஸ்னி – ஹாட் ஸ்டார் விஐபி தளத்தில் நவம்பர் 14 தீபாவளி அன்று வெளியாகிறது.

3. அந்தகாரம்

விக்னராஜன் என்ற அறிமுக இயக்குனரை வைத்து இயக்குனர் அட்லீ தயாரித்திருக்கும் படம் அந்தகாரம். இந்தப் படத்தில் அர்ஜுன் தாஸ் என்பவர் நாயகனாக நடித்திருக்கிறார்.

இந்தப் படத்தின் பணிகள் முடிந்து வெளியீட்டுக்குத் தயாரானபோது கொரோனா அச்சுறுத்தல் தொடங்கியது. இதனால், ஓடிடி தளங்களில் வெளியிடுவதற்கான பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வந்தது. பிறகு நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் படம் வெளியாவது உறுதியானாலும், எப்போது வெளியாகும் என்பதே தெரியாமல் இருந்தது.

இறுதியாக, நவம்பர் 24ம் தேதி இந்தப் படம் வெளியாகும் என நெட்ஃப்ளிக்ஸ் தளம் அறிவித்துள்ளது. இதனைப் படக்குழுவினரும் தங்களுடைய சமூக வலைதளத்தில் உறுதி செய்துள்ளனர்.

இவை தவிர, டிஸ்னி – ஹாட்ஸ்டாரில் நவம்பர் 9ஆம் தேதி அக்ஷய்குமார் நடித்த லக்ஷ்மி திரைப்படம் வெளியாகிறது. இது தமிழில் ராகவா லாரன்ஸ் நடித்த காஞ்சனா திரைப்படத்தின் ரீ-மேக்.

நவம்பர் 11ஆம் தேதியன்று, பாபி தியோல் நடித்து பிரகாஷ் ஜா இயக்கியிருக்கும் ஆஷ்ரம் வெப்சீரிசின் இரண்டாம் பாகம் எம்எக்ஸ் பிளேயரில் வெளியாகவிருக்கிறது. இந்த வெப்சீரிஸின் முதல் பாகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here