சிறப்பு வாய்ந்த மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்தக் கோவில் ‘மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்’ என்றே அழைக்கப்படுகின்றது.

மீனாட்சி அம்மன், மதுரையில் பிறந்ததாகக் கருதப்படுவதால், அம்பாளின் சன்னிதியே முதன்மையாக உள்ளது. அம்மனை வணங்கிய பின்பே சிவபெருமானை வணங்கும் மரபு கடைப்பிடிக்கப்படுகிறது.

பாண்டிய மன்னன் குலசேகரபாண்டியனின் கனவில் சிவபெருமான் வந்ததால், அவன் கடம்பவனம் என்ற காட்டை அழித்து மதுரை மாநகரையும், இந்த சிவசக்தி தலத்தையும் அமைத்ததாகக் கருதப்படுகிறது.

மீனாட்சி அம்மன் கோவிலைச்சுற்றி நான்கு மாடங்கள் அமைத்துள்ளதால் ‘நான்மாடக் கூடல்’ என்ற பெயரும் மதுரைக்கு உண்டு.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்கோவில் எட்டு கோபுரங்களையும் இரண்டு விமானங்களையும் உடையது. இங்குள்ள கருவறை விமானங்கள், ‘இந்திர விமானம்’ என்று அழைக்கப்படுகிறது. 32 சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும் இந்த கருவறை விமானங்களைத் தாங்குகின்றன.

மீனாட்சி அம்மன் திருக்கோவிலில், நான்கு புறமும் ஒன்பது நிலைகளை உடைய நான்கு கோபுரங்கள் மிக உயர்ந்த நிலையில் இருக்கிறது. கிழக்கு கோபுரம் கி.பி. 1216 முதல் 1238 ஆண்டுக்குள்ளும், மேற்கு கோபுரம் கி.பி. 1323-ம் ஆண்டிலும், தெற்கு கோபுரம் கி.பி. 1559-ம் ஆண்டிலும், வடக்கு கோபுரம் கி.பி. 1564 முதல் 1572-ம் ஆண்டிலும் கட்டப்பெற்று முடிக்கப் பெறாமல், பின்னர் 1878-ம் ஆண்டில் தேவகோட்டை நகரத்தார் சமுதாயத்தைச் சேர்ந்த வயிநாகரம் குடும்பத்தினரால் முடிக்கப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது. இவற்றுள் தெற்கு கோபுரம் மிக உயரமானதாகும். இதன் உயரம் 160 அடி ஆக இருக்கிறது.

இக்கோவிலுக்குள் ஒரு ஏக்கர் பரப்பளவில் பொற்றாமரைக்குளம் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள இரட்டை கோபுரத்தில் ஒன்று மீனாட்சிக்கும், மற்றொன்று சுந்தரேஸ்வரருக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

மீனாட்சி ஆலயம் பல உள்ளக மண்டபங்களையும் கொண்டுள்ளது. இவற்றுள் ஆயிரம் கால் மண்டபம் மிகவும் பிரசித்தி பெற்றது. 600 வருடங்களின் மேலான கட்டுமானத்தில் உருவாகியதும், மிகவும் கலை அம்சம் மிக்கதுமான இந்த ஆலயத்தில் மொத்தமாக 33 மில்லியன் கலை வேலைப்பாடுகள் இருப்பதாக சொல்லப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here