சீன உற்பத்தி பொருட்களுக்குத் தடை- அமெரிக்க அதிரடி!

சீனாவில் உள்ள முகாம்களில், சிறுபான்மை சமூகம் என அறியப்படும் உய்குர் முஸ்லிம்களில் பெரும்பகுதியினரை அரசியல் மறு கல்வியூட்டல் என்ற பெயரில் அந்நாடு சிறை பிடித்து கொடுமைகளை இழைத்து வருகிறது என அமெரிக்க அதிகாரிகள் மற்றும் ஐ.நா. நிபுணர்கள் கூறி வருகின்றனர். ஆனால் சீனா இதனை மறுத்து வருகிறது. அவர்கள் தவறாக நடத்தப்படவில்லை. உய்குர் முஸ்லிம்களுக்கு தொழிற்பயிற்சி வழங்கப்படுகிறது என தெரிவித்தது.

எனினும், இதுபோன்ற சிறைப்படுத்தப்பட்ட கைதிகளாக முகாம்களில் தங்கி இருப்பவர்களுக்கு, சித்ரவதை செய்தல், அடித்து துன்புறுத்துதல் மற்றும் உணவு மற்றும் மருந்து ஆகியவை மறுக்கப்படுதல் ஆகிய கொடுமைகளுடன் தங்களது மத வழக்கங்களை பின்பற்றுதல் அல்லது தங்களது மொழியை பேசுவதற்கு தடை விதித்தல் போன்ற இன்ன பிற கொடுமைகளும் நடைபெறுகின்றன என கூறப்படுகிறது.

உய்குர் முஸ்லிம்களை கட்டாயப்படுத்தி பருத்தி உற்பத்தி தொழிலுக்கு பயன்படுத்தி கொள்வதும், அவர்களில் கைதிகளாக உள்ளவர்களையும் கூலிகளாக பயன்படுத்துவதும் தெரிய வந்துள்ளது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதன் எதிரொலியாக, சீன அரசு அமைப்பின் காட்டன் மற்றும் அது சார்ந்த உற்பத்தி பொருட்கள் இறக்குமதிக்கு தடை விதிக்க அமெரிக்க அரசு முடிவு செய்து அதற்கான உத்தரவை பிறப்பித்து உள்ளது.

இதனை தொடர்ந்து சீன அரசின் ஜின்ஜியாங் உற்பத்தி மற்றும் கட்டுமான நிறுவனத்தில் இருந்து உற்பத்தி செய்யப்படும் காட்டன் பொருட்கள், ஆடைகள் மற்றும் ஜவுளி பொருட்கள் ஆகியவற்றை அனைத்து அமெரிக்க துறைமுகங்களிலும் நுழைவு பகுதியிலேயே தடுத்து, தடை செய்யும் நடவடிக்கையில் அமெரிக்க சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here