ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு கட்டுப்பாடு:

 ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழகஅரசு வெளியிட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறையில், விழாவில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள், உதவியாளர்கள், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள், அரசுத் துறை அதிகாரிகள் அனைவரும் 2 நாட்களுக்கு முன்பாக தங்களுக்கு கரோனா தொற்று இல்லை என சான்று பெற்றிருப்பது கட்டாயம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ற்போது ஜல்லிக்கட்டுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கியுள்ள அரசு, அதை அரசாணையாக வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

ஜல்லிக்கட்டு நடத்த ஏற்கெனவே வழங்கப்பட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன், தற்போது கரோனாதொற்று தடுப்பு நடவடிக்கையாக சில கட்டுப்பாடுகளுடன், நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

அதன்படி, ஜல்லிக்கட்டில் ஒரு காளையுடன் ஒரு உரிமையாளர், அந்த காளையுடன் நன்கு பழக்கமுள்ள ஒரு உதவியாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவார். காளைகளை பதிவு செய்வது, உரிமையாளர், உதவியாளர் பதிவு, மாடுபிடி வீரர்கள் பதிவு ஆகியவற்றை மாவட்ட நிர்வாகம் ஒரு வாரத்துக்கு முன்பே முடித்து, அவர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். இவர்களுக்கு கரோனா தொற்று இல்லை என 2 நாட்களுக்கு முன்பாக பரிசோதனை செய்து சான்று பெற்றிருப்பது அவசியம்.

அடையாள அட்டை இல்லாதவர்கள், நிகழ்ச்சி நடைபெறும் வளாகத்தில் நுழைய அனுமதி இல்லை. ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரர்கள் 300 நபர்களுக்கு மிகாமல் கலந்துகொள்ளலாம். எருது விடும் நிகழ்ச்சிகளில் 150 வீரர்களுக்கு மிகாமல்கலந்துகொள்ள வேண்டும். இந்நிகழ்ச்சிகளில் திறந்தவெளியில், அளவுக்கு ஏற்ப, சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், அதிகபட்சம் 50 சதவீதம் பேருக்கு மிகாமல் பார்வையாளர்கள் கலந்துகொள்ளலாம். அனைத்து நிகழ்ச்சிகளிலும் பார்வையாளர்களுக்கு உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்க வேண்டும்.

பார்வையாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிவதும், தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதும் கட்டாயம். விதிகளை மீறுவோர், நிகழ்ச்சி நடைபெறும் வளாகத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்.

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை மேற்பார்வை செய்யும் அனைத்து துறை அதிகாரிகள், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள், கரோனா பரிசோதனை செய்து, தொற்று இல்லை சான்று பெற்றிருக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here