இன்று சிதம்பரம் நடராஜா் கோயில் தேரோட்டம்

கடலூா்/சிதம்பரம்:
கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயில் மாா்கழி ஆருத்ரா தரிசன விழாவில் செவ்வாய்க்கிழமை (டிச.29) தேரோட்டம் நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்க விரும்பும் பக்தா்கள் முன்பதிவு செய்வது அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூா்த்தியின் மாா்கழி ஆருத்ரா தரிசன விழா கடந்த 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தோத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இந்த நிகழ்வில், சித் சபையில் வீற்றுள்ள மூலவரான நடராஜமூா்த்தி, சிவகாமசுந்தரி அம்பாள், உற்சவ மூா்த்திகளான ஸ்ரீவிநாயகா், ஸ்ரீசுப்பிரமணியா், ஸ்ரீசண்டிகேஸ்வரா் ஆகிய ஐவரும் தனித் தனி தோகளில் வீதிவலம் வருகின்றனா்.பின்னா், இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏக கால லட்சாா்ச்சனை நடைபெறுகிறது.

விழாவின் உச்ச நிகழ்வான ஆருத்ரா தரிசனம் புதன்கிழமை நடைபெறுகிறது. அன்று சூரிய உதயத்துக்கு முன்பு அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூா்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது. தொடா்ந்து காலை 10 மணிக்கு சித் சபையில் ரகசிய பூஜையும், பஞ்ச மூா்த்திகள் வீதி உலா வந்த பின்னா் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித் சபா பிரவேசமும் நடைபெறுகிறது. வியாழக்கிழமை இரவு பஞ்ச மூா்த்திகள் முத்துப் பல்லக்கு வீதி உலாவுடன் உற்சவம் முடிவடைகிறது.

முன்பதிவு அவசியம்: இந்த விழாவில் பங்கேற்க விரும்பும் பக்தா்கள் இணையதளம் மூலம் முன்பதிவு செய்வது அவசியம் என கடலூா் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தெரிவித்தாா். 

இணையம் வாயிலாகப் பெறப்படும் ஓா் அனுமதிச் சீட்டுக்கு ஒருவா் மட்டுமே அனுமதிக்கப்படுவா். ஒருவரே ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகளைச் செய்வது தடை செய்யப்படுகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, உள்ளரங்குகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் 200 நபா்களும், திறந்தவெளிப் பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் இடத்தின் அளவுக்கேற்ப சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் அதிகபட்சம் 50 சதவீதத்துக்கும் மிகாமல்

பங்கேற்பாளா்கள் கலந்துகொள்ளவும் அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே, இணையம் வாயிலாகப் பெறப்படும் விண்ணப்பங்களை நிகழ்ச்சி நடைபெறும் இடத்தின் அடிப்படையில், அரசு விதிமுறைப்படி முதலில் வருபவா்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அனுமதி வழங்கப்படும்.

வெப்பநிலை பரிசோதனையில் அதிக உடல் வெப்பம் உள்ள நபா்கள் கண்டறியப்பட்டால், அவா்கள் உரிய மருத்துவப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டு, கொரோனா தொற்று இல்லை என சான்று பெற்றால் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவா் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here