வாழ்வில் வசந்தம் வீச வசந்த பஞ்சமி விரதம் அனுஷ்டிக்கும் முறை

வாழ்வில் வசந்தம் வீச நாளை வசந்த பஞ்சமி விரதம் அனுஷ்டிக்கும் முறை  – இன்று வசந்த பஞ்சமி 16-2-2021

தை அமாவாசைக்கும் மாசி அமாவாசைக்கும் இடைப்பட்ட காலத்துக்கு மாக மாதம் என்று பெயர். அந்த மாக மாத வளர்பிறை பஞ்சமி நாளே வசந்த பஞ்சமியாகக் கொண்டாடப்படுகிறது. குளிர்காலம் முடிந்து அடுத்து வரவிருக்கும் வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக இந்நாள் கொண்டாடப் படுவதால், வசந்த பஞ்சமி என்று இந்நாள் அழைக்கப்படுகிறது. சரஸ்வதி தோன்றிய நாளாக இந்நாள் கருதப்படுவதால், பாரதத்தின் வடக்குப் பகுதியில் சரஸ்வதி பூஜையாக இந்நாள் கொண்டாடப் படுகிறது.

சரஸ்வதிக்குப் பிடித்தமான நிறம் மஞ்சள். மஞ்சள் நிறப் பூக்கள் மலரும் காலமாக வசந்த காலம் இருப்பதால், மக்களும் மஞ்சள் நிற ஆடைகள் அணிந்து, மஞ்சள் நிறப் பலகாரங்கள் செய்து இந்நாளைக் கொண்டாடுவார்கள். கண்ணனும் பலராமனும் சாந்தீபனியிடம் குருகுல வாசம் செய்யத் தொடங்கிய நாள் வசந்த பஞ்சமி என்று பாரதத்தின் வடக்குப் பகுதிகளில் கூறப்படுவதால், அப்பகுதிகளில் இந்நாளில் பிள்ளைகளைப் பள்ளியில் சேர்த்தல் விசேஷமாகக் கருதப்படுகிறது.

ராஜஸ்தான் மாநிலம் புஷ்கரத்தில் உள்ள பிரம்மா சரஸ்வதி கோயில், கர்நாடகத்தில் உள்ள உடுப்பி கிருஷ்ணர் கோயில், ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி ஜகந்நாதர் கோயில் ஆகிய கோயில்களில் வசந்த பஞ்சமி ஆண்டுதோறும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அடுத்த 40 நாட்களில் வரவிருக்கும் ஹோலி பண்டிகையை வரவேற்கும் விழாவாகவும் இந்நாள் கருதப்படுவதால், வசந்த பஞ்சமியன்று வண்ண வண்ணப் பட்டங்களை வானில் பறக்க விட்டு மக்கள் கொண்டாடுவார்கள்.

சுக்ல பஞ்சமி என்று சொல்லப்படும் வசந்த பஞ்சமி நாளில், விரதம் இருந்து அம்பாளைத் தொழுது பிரார்த்தித்தால், வாழ்வில் வசந்தம் நிச்சயம். இந்த நாளில், காலையில் விரதம் மேற்கொள்ளுங்கள். வீட்டில் விளக்கேற்றி அபிராமி அந்தாதி பாராயணம் செய்யலாம். ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்யலாம். இவை வாழ்வில் பல உன்னதங்களைப் பெற்றுத் தரும்.

சர்க்கரைப் பொங்கல், பால் பாயசம், கேசரி முதலான நைவேத்தியங்களைப் படைத்து தேவியை உபாஸிக்கலாம்.அதேபோல், அருகில் உள்ள கோயில்களுக்குச் சென்று அம்பாளை வணங்கி வழிபடுங்கள்.

செவ்வரளி மாலை சார்த்துங்கள். செந்நிற மலர்கள் சூட்டுங்கள். நெய் விளக்கு ஏற்றி வழிபடுங்கள். எலுமிச்சை மாலை சார்த்தி வழிபடுவது இன்னும் வளமும் பலமும் சேர்க்கும். முடிந்தால், அன்றைய நாளில், அம்பாளை வழிபட்டு, இயலாதோருக்கு தயிர்சாதம் வழங்குங்கள். அதில் குளிர்ந்து போய், நம் வாழ்வில் வசந்ததத்தைத் தந்தருள்வாள். நம் வாழ்க்கையையே குளிரச் செய்துவிடுவாள் தேவி!

ஸ்ரீ காயத்ரி மந்திரம் ஜெபிக்கும் முறை நவக்கிரகங்களை வழிபடும் முறை செவ்வாய்க் கிழமை முருகனுக்கு விரதம் இருக்க உகந்த நாள் என்பது ஏன்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here