அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் நடிகையுமான ஜெயலலிதா, 1948-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதே நாளில் கர்நாடக மாநிலம் மேல்கோட்டை என்னும் கிராமத்தில் பிறந்தார்.
ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடை என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். பின்னர் தமிழ் திரைப்பட நடிகர்களில் முக்கியமானவர்களாக இருந்த எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெய்சங்கர், முத்துராமன் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்தார். ஒரு கட்டத்தில் அதிமுகவில் இணைந்து அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராகவும் பதவி வகித்தார்.
எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து 1989-ஆம் அண்டி அதிமுகவின் தலைமைப் பொறுப்பேற்று அதன் பொதுச் செயலாளர் ஆனார். 1989- ஆம் ஆண்டு முதல் 1991 வரை தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் எதிர்க்கட்சி தலைவராக பணியாற்றினார். 1991-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று தமிழகத்தின் 11- ஆவது முதலமைச்சராக முதல்முறையாக பதவியேற்றுக் கொண்டார்ர்.
தமிழகத்தின் முதல்வராக 4 முறை பதவி வகித்துள்ளார். இவர் கலைப் படைப்புகளுக்காகவும், சமூகப் பணிகளுக்காகவும் கலைமாமணி விருது, தங்க மங்கை விருது என பல விருதுகளை பெற்றிருக்கிறார். தாயுள்ளம் கொண்டு ஏழைகளின் துயர் நீக்குவதால் ‘அம்மா’ என்று தொண்டர்களால் அழைக்கப்படுகிறார்.
இதுமட்டுமின்றி புரட்சித் தலைவர் என்றழைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசாக கருதப்படுவதால் இவரை புரட்சித் தலைவி என்று மக்கள் கூறி அழைக்கின்றனர்.