மக்களின் குரல் முடங்கிப் போகலாமா?

 

மனசுக்கு எது சரியென்று படுகிறதோ அதனைத் துணிந்து செய்யுங்கள். ஏச்சும் பேச்சும் வந்து கொட்டத்தான் செய்யும். செய்தாலும் குற்றம் – செய்யாவிட்டாலும் குற்றம். மனசாட்சிக்கு மட்டும் பயந்து செய்ய வேண்டியதை -சொல்ல வேண்டியதைத் துணிந்து செய்யுங்கள் – சொல்லுங்கள். இப்படிச் சொன்னவர் அமெரிக்க அதிபர் ஃபிரங்க்லின் ரூஸ்வெல்டின் துணைவியார் இலினோர் ரூஸ்வெல்ட்.

இதற்கு இன்று மிகவும் பொருத்தமான -துணிச்சல் மிக்கவராக நமது கண்களுக்குத் தெரிகின்றவர் நாடாளுமன்ற மக்களவை துணை சபாநாயகர் டத்தோஸ்ரீ அஸாலினா ஓஸ்மான் சடை்.

கோவிட்-19 நிலைமை மோசமடைந்து வருவதைக் காரணமாக வைத்து அவசரகாலத்தைப் பிரகடனம் செய்த பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம், நாடாளுமன்றத்தையும் ஜனவரி 11ஆம் தேதி தொடங்கி ஆகஸ்டு 1 வரை முடக்கி வைப்பதாக அறிவித்தது.

இந்த இடைக்கால முடக்கத்தால் நாடாளுமன்ற ஜனநாயகம் மரணித்துவிட்டது எனப் பொங்கி எழுந்த அஸாலினா, இதன் தொடர்பில் நாட்டின் அட்டர்னி ஜெனரல் டான்ஸ்ரீ இட்ருஸ் ஹருண், மக்களவை சபாநாயகர் டத்தோ அஸஹார் அஸிஸான் ஹருண் (இட்ருஸ் ஹருணின் உடன்பிறப்பு), பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் ஆகியோருக்கு நீண்டதொரு கடிதம் அனுப்பி இருக்கிறார்.

இந்த விவகாரத்தில் அஸாலினா மலேசியர்கள் மத்தியில் மிகவும் உயர்ந்து நிற்கிறார். அவரின் இந்தத் தைரியமான, துணிச்சலான, வெளிப்படையான, உண்மையின் வெளிப்பாடாக சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் அந்தக் கடிதத்தின் ஒவ்வொரு வார்த்தையும் மக்களின் குரலாகவே எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

நாடாளுமன்ற மக்களவை துணை சபாநாயகராக இல்லாமல் மக்களின் குரலாக அவர் பேசியிருப்பதை (கடிதம்) ஒட்டுமொத்த மலேசியர்களும் மனதார வரவேற்று பாராட்டி வருகின்றனர்.

எஜமானர்களை எதிர்த்துக் குரல்கொடுப்பது அவ்வளவு எளிதானது அல்ல. தொட்டதற்கெல்லாம் வழக்குப் போட்டுக் கொண்டிருக்கும் ஓர் அரசாங்கத்தின் முடிவை எதிர்த்துக் குரல்கொடுப்பது என்பது எரியும் கொள்ளிக்கட்டையால் தலையில்   சொரிந்து கொள்வதற்குச் சமமானதாகும்.

இந்தத் துணிச்சல் அஸாலினாவுக்கு இருந்திருக்கிறது. அவசரகாலப் பிரகடனத்திற்குப் பின்னால் மறைந்துகொண்டு ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றான நாடாளுமன்றத்தை முடக்கி இருப்பது மக்களின் குரலை ஒடுக்குவதற்குச் சமமானது என்று குரல் கொடுத்திருக்கிறார் பெங்கேராங் நாடாளுமன்ற உறுப்பினருமான அஸாலினா.

அம்னோ கட்சியைச் சேர்ந்த இவர், பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்திற்கு ஆதரவாக இருக்கின்ற நிலையில், தம்முடைய இந்த மிகக் கடுமையான போக்கை முன்னெடுத்திருப்பதால் துணை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்யவே கூடாது.

இது நடக்குமாயின் ஒரு மிகப்பெரிய ஜால்ரா அப்பதவியில் அமரக்கூடும். நாடும் மக்களும் ஏற்கெனவே பல்வேறு நிச்சயமற்ற சுழல்களால் அல்லாடிக் கொண்டிருக்கின்றனர். இதனையும் அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக – மக்கள் பிரதிநிதியாக மிகச் சரியாகவே அஸாலினா அவரின் கடமையைச் செய்திருக்கிறார். நாடாளுமன்றத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் முடக்கி இருப்பதன் வழி அதனை முற்றாகப் பலவீனமடையச் செய்திருப்பது வரலாற்றில் ஒரு கறுப்பு அத்தியாயமாகவே பதிவாகும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.

குறைந்த எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பது, ஏற்புடைய – தளர்வுமிக்க அமர்வு நேரம், நாடாளுமன்றக் கூட்டத்தை நேரலையாக ஒளிபரப்புவது உள்ளிட்ட நடைமுறைகளைப்பின்பற்றி கோவிட்-19 பெருந்தொற்றால் பெரும் பாதிப்புகளை எதிர்நோக்கி இருக்கும் நாடுகளில் நாடாளுமன்ற கூட்டங்கள் முடக்கப்படாமல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

ஆனால், நம் நாட்டில் அந்த நடைமுறை ஏன் மறுக்கப்படுகிறது என்றும் அஸாலினா அக்கடிதத்தில் கேள்வி எழுப்பி இருக்கிறார். மக்களின் குரலாக ஒலிப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களின் ஜனநாயகக் கடமையைச் ஆற்றுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்ற அவரின் குரல் இப்போது திக்கெட்டுத் திசைகைளிலும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

ஜனநாயகம் அடக்கம் செய்யப்பட்டுவிட்டால் மக்களின் குரலும் ஓய்ந்து போகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here