தமிழ்த்துறை பட்டப் படிப்புக்கான உபகாரச் சம்பளம் இல்லை என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2021, பிப்ரவரி 19ஆம் தேதி வெளியிடப்பட்ட கல்வித்துறை இளங்கலைப் பட்டப்படிப்புக்கான உபகாரச் சம்பளப் பட்டியலில் தமிழ் விடுபட்டுள்ளது.
2012ஆம் ஆண்டில் இருந்து வழங்கப்பட்டு வரும் இக்கல்வி உபகாரச் சம்பளம் 2017இல் மட்டும் தடைபட்டது. இந்த பட்டப்படிப்பை முடித்ததும் சம்பந்தப்பட்ட மாணவர்கள் இடைநிலைப்பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படுவர்.
இவர்கள், இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் பாடம், தமிழ் இலக்கியம் எடுக்கும் மாணவர்களுக்குப் பாடம் நடத்துவர். கடந்த சில ஆண்டுகளாகவே இடைநிலைப்பள்ளிகள், ஆறாம் படிவத்தில் தமிழ்மொழி, தமிழ் இலக்கியம் கற்றுத் தருவதற்குரிய ஆசிரியர் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளனர்.
மேலும் பாட நேர அட்டவணையில் இவ்விரு பாடங்களும் இடம்பெறவில்லை. மாறாக வகுப்பு நேரத்திற்கு அப்பாற்பட்ட நேரத்தில் இவை போதிக்கப்படுகின்றன.
நிலைமை இவ்வாறு இருக்க, இடைநிலைப்பள்ளிகளிலும் ஆறாம் படிவங்களிலும் இவ்விரு பாடங்களையும் போதிப்பதற்குப் போதுமான எண்ணிக்கையில் தமிழாசிரியர்கள் இருக்கின்றனர்.
ஆனால், இத்துறை படிப்புக்கு உபகாரச் சம்பளம் வழங்கப்பட மாட்டாது என்று மலேசிய கல்வி அமைச்சு அறிவித்திருக்கிறது.
கல்வி அமைச்சின் இந்த முடிவு எந்தத் தரவுகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்பது புரியாத புதிராக இருக்கிறது. உண்மைக்குப் புறம்பான நிலையை இந்த முடிவு பிரதிபலிக்கிறது. உண்மையிலேயே மிகவும் வேதனை அளிக்கிறது.
ஆங்கிலம், பகாசா மெலாயு, சீனம், ஈபான், கடாஸான் – டூசுன் போன்ற மொழித்துறைக்கு உபகாரச் சம்பளம் வழங்கப்படும் நிலையில் ஙெ்ம்மொழி தமிழுக்கு அந்தச் ங்லுகை மறுக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது.
மலேசியக் கல்வி அமைச்சு அதன் இம்முடிவை கண்டிப்பாகவும் அவசியமாகவும் பரிசீலிக்க வேண்டும். தமிழ்த்துறை இளங்கலைப் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்குக் கல்வி உபகாரச் சம்பளம் வழங்க வேண்டும்.
இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் ஆசிரியர் ஆவதற்கான பட்டப்படிப்பு உப்சி பல்கலைக்கழகத்தில் மட்டுமே உள்ளது. ஆசிரியர் பயிற்சிக் கழகத்தில் இக்கல்வி இலவசமானது. சிறப்பு அலவன்ஸ் தொகையும் வழங்கப்படும். இதற்கு கல்வி உபகாரச் சம்பளம் இல்லை. இலவசமானது. வேலை உடன்பாடு உள்ளது என்று கல்வி ஆய்வாளர் ஆ. திருவேங்கடம் விளக்கம் அளித்துள்ளார்.
அதே சமயத்தில் உப்சி உட்பட 11 அரசுப் பல்கலைக்கழகங்களில் நடத்தப்படும் இடைநிலைப்பள்ளிகளுக்கான ஆசிரியர் பட்டப்படிப்பை கட்டணம் செலுத்தித்தான் பயில வேண்டும். இதனால் படிக்கும் காலத்தில் அரசிடம் வேலை உடன்பாடு இல்லை.
நம் நாட்டைப் பொறுத்தவரை உயர்கல்வி நிலையில் தாய்மொழி தமிழ் எண்ணற்ற சவால்களை பல ஆண்டுகளாகவே சந்தித்து வருவதை திருவேங்கடம் மிகத் தெளிவாகவே சுட்டிக்காட்டி இருக்கிறார்.
இவற்றுக்கு மத்தியில் 2020ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் போதிக்கப்படும் கொள்கையில் கல்வி அமைச்சு பெரிய மாற்றம் ஒன்றை 2019இல் கொண்டுவந்தது.
இப்புதிய கொள்கையின் வழி இவ்வளவு காலமும் அநாதைப் பிள்ளையாக கருதப்பட்டு வந்த எஸ்பிஎம் தமிழ் இலக்கியப் பாடத்திற்கு ஒரு புதிய அங்கீகாரம் கிடைத்தது.
இனி 2020 முதல் எஸ்பிஎம் தமிழ் இலக்கியப்பாடம் பள்ளி பாட நேரத்திலேயே போதிக்கப்படுவதற்கு அக்கொள்கை வழி வகுத்தது.
ஆனால், பள்ளி முதல்வர் இதனை நடைமுறைப்படுத்த அனுமதிப்பாரா?
– பி.ஆர். ராஜன்