தமிழ்ப்பள்ளி மாணவி கீர்த்திகாவின் தங்கப் பதக்க வேட்டை

 

கிள்ளான், 

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் எதிலும் சளைத்தவர்கள் அல்ல என்பதற்கு மற்றொரு சான்றாக உலக அரங்கில்
சாதனை படைத்துள்ளார் கிள்ளான் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி மாணவி கீர்த்திகா ராமலிங்கம்.
இயங்கலை வழி நடத்தப்பட்ட போட்டியில் உலகிலுள்ள 40 நாடுகளின் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

அந்த 2021ஆம் ஆண்டின் அனைத்துலக அறிவியல் தொழில்நுட்பப் போட்டியில் நம் நாட்டைச் சேர்ந்த தமிழ்ப்பள்ளி மாணவியான கீர்த்திகா தமக்கே அந்த தங்கப் பதக்கம் சொந்தம் என தனது மதிநுட்பத்தைக் கொண்டு நடுவர்களை அசர வைத்து மீண்டும் ஓர் அனைத்துலக சாதனை படைத்துள்ளார்.

சிலாங்கூரில் அடிக்கடி ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாட்டை முன்னுதாரணமாக கொண்டு தண்ணீர் மறுசுழற்சி திட்டத்தை மேற்கொண்டார் கீர்த்திகா.

நாம் அன்றாடும் குளிக்க, பாத்திரங்கள் கழுவ, துணி துவைக்கப் பயன்படுத்தும் தண்ணீரை சேமித்து அதனை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்தும் திட்டத்தை ஆராய்ச்சியாக மேற்கொண்டார்.

நெல் அறுவடைக்குப் பின்னர் பயன்படாத வைக்கோல் நீரில் கலக்கும் கழிவுகளை ஈர்க்கும் தன்மை கொண்டது, கன்னா தாவரம் என்ற செடியின் வேர் நீரிலுள்ள ரசாயனத்தை இழுக்கும் தன்மையுடையது, சிறிய கற்கள், மணல் போன்றவை நீரை சுத்தப்படுத்திக் கொடுக்கும் தன்மை உடையவை.

நிலக்கரி தண்ணீரின் வாடையை குறைக்கும் தன்மையுடையது என்பதால் இவற்றையெல்லம் பயன்படுத்தி தண்ணீரை மறுசுழற்சி செய்து சுத்தப்படுத்தியதாக கீர்த்திகா விளக்கினார்.

நாம் அன்றாடும் பயன்படுத்திய நீரை வீணாக்காமல் மறுசுழற்சி செய்து மீண்டும் நாம் கார் கழுவ, வீட்டை சுத்தப்படுத்த, பாத்திரங்கள் கழுவ, செடிகளுக்கு நீர் பாய்ச்சுவதற்கும் பயன்படுத்தலாம்.

மறுசுழற்சி குறித்த வீடியோ பதிவை பாகிஸ்தான், வங்காளதேசம், அல்பேனியா, துபாய், கிரீஸ், குரோஷியா போன்ற நாடுகளைச் சேர்ந்த நடுவர் குழுவிற்கு அனுப்பி வைத்ததாக குறிப்பிட்டார்.

பின்னர் அவர்கள் குறிப்பிட்ட ஒரு நாளில் நேரலையாக கேள்விகள் கேட்டு அவற்றிக்கான விளக்கங்களை பெற்றுக் கொண்டனர். நான்கு நடுவர்கள் கேள்விகளைk கேட்க மேலும் நால்வர் கண்காணித்துக் கொண்டிருப்பார்கள்.

இந்த நேர்க்காணலில் நடுவர்கள் அனைவரும் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருந்ததால் மொழி உச்சரிப்பு தமக்கு பெரும் சவாலாக அமைந்ததாகக் குறிப்பிட்டார்.

இருந்தாலும் சமாளித்துக் கொண்டு சிறப்பாகவும் தெளிவாகவும் பதில்களை வழங்கியதாக கீர்த்திகா தெரிவித்தார். தலைமை நீதிபதி உட்பட அனைத்து நடுவர்களின் பாராட்டுகளைப் பெற்று தங்கப் பதக்கத்தை வெற்றிக் கொண்டதாக  அவர் கூறினார்.

அறிவியல் புத்தாக்கம், இளையோர் அறிவியல் போட்டி, பேச்சுப் போட்டி போன்றவற்றில்

20 க்கும் மேற்பட்ட தங்கப் பதக்கங்களை வாரிக்குவித்துள்ள கீர்த்திகா ,

தமக்கு எப்பொழுதும் சிறப்பான பயிற்சிகளைக் கொடுத்து தன்னை தயார் படுத்தும் டாக்டர் ஜெயமாலினி ஏகநாதன் என்றும் நன்றிக்குரியவர் என பாராட்டிய கீர்த்திகா, தலைமையாசிரியர் சிவபாரதி விஸ்வநாதன், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி மேலாளர் வாரியம் ஆகியோர் சிறந்த ஒத்துழைப்பை வழங்கினர் என்றார்.

 

கிள்ளான் பண்டார் புத்ரியைச் சேர்ந்த ராமலிங்கம் – பவானி தம்பதியரின் மூன்றாவது மகளான கீர்த்திகா தனது பெற்றோரின் ஊக்குவிப்பு அளப்பரியது என குறிப்பிட்டதோடு அவர்கள் வழங்கும் ஆர்வம், ஒத்துழைப்பு தம்மை உயர்ந்த இடத்திற்கு கொண்டுச் சென்றதாக குறிப்பிட்டார்.

தன்னுடைய உடன் பிறப்புகளான ரா.தவித்ரா, ரா.லுகேந்தரா ஆகியோரின் வழிகாட்டலும் தமக்கு உறுதுணையாக இருப்பதாக குறிப்பிட்டார். இவ்வாண்டு ஆறாம் ஆண்டு பயின்றுவரும் இவர், ஆண்டு இறுதியில் எழுதவிருக்கும் யூ.பி.எஸ்.ஆர். தேர்விலும் சிறப்பான தேர்ச்சியைப் பெறுவேன் என மிகுந்த நம்பிக்கையுடன்

தெரிவித்தார்.

பி.ஆர்.ஜெயசீலன்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here