மனம் மாறினால் மட்டுமே நாடும் மக்களும் வாழ்வர்

 

நாடு தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் பயணிப்பதற்கு, மக்கள்  சுபிட்சமாக – நிம்மதியாக வாழ்ந்திடுவதற்கு இனம் – சமயம் என்ற கரும்புள்ளி முற்றாகக் களையெடுக்கப்பட வேண்டும்.

இனம் – சமயம் சித்தாந்தங்களைக் காட்டிலும் நாடு – மக்கள் என்ற உணர்வு மேலோங்க வேண்டும். இன- சமய அரசியல் சித்தாந்தங்களை வேரறுத்தால் மட்டுமே மலேசியாவின் எதிர்காலம் வலுப்பெறும்.

அரசியல் விருப்பங்கள் என்பது மாறி நாடு – மக்கள் விருப்பங்கள் என்று உருமாற்றம் காண வேண்டும். சிந்தனைப் போக்கில் இந்த மாற்றம் வேரூன்ற வேண்டும்.

இந்த எண்ணங்கள் – சித்தாந்தங்கள் மட்டுமே வளமான – சுபிட்சமான மலேசியாவையும் சுபிட்சம் நிறைந்த மக்களையும் எதிர்காலத்தில் நிம்மதியாகவும் மன ஆரோக்கியத்துடனும் வாழ வைக்கும்.

மக்களும் இந்த மனப்போக்கிற்கு மாற வேண்டும். தங்களுக்கு வேண்டியவர் என்பதால் அவர் போடும் இன-சமயத் தாளத்திற்கு ஆட்டம் போடுவதை மக்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

மக்கள் மாறினால் – அவர்களின் சிந்தனைகள் புதிய உருமாற்றம் கண்டால் எல்லாமே தானாகவே மாறிவிடும். மக்களை வைத்துதான் அரசியல் கபடதாரிகள் இன்று பேயாட்டம் ஆடிக்கொண்டிருக்கின்றனர்.

ஒரு நாடு என்ற ரீதியில் நாம் தொடர்ந்து முன்னோக்கிப் பயணம் செய்ய வேண்டுமெனில் நாம் மலேசியர்கள் என்ற உணர்வு மக்களிடம் மேலோங்க – உயிர்பெற வேண்டும்.

தற்போது ஆட்சி செய்யும் பெரிக்காத்தான் நேஷனல் அரஙசாங்கத்தில் 99 விழுக்காட்டினர் மலாய்க்காரர்கள். அது வெற்றி பெற்றதா? இல்லவே இல்லை. பெரும் தோல்வியை அது எதிர்நோக்கியுள்ளது.

நாடு சுதந்திரம் பெற்று கிட்டத்தட்ட 63 ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையிலும் இன-சமய அரசியல் சித்தாந்தங்களில் இருந்து மலேசியா விடுபட்டுள்ளதா? இல்லவே இல்லை!

அதன் தொடர் தோல்விகளுக்கும் முன்னேற்ற இடையூறுகளுக்கும் இந்த இன-சமய சித்தாந்தங்களே காரணம் என்பதை மிதவாத மற்றும் தெளிவான சிந்தனை கொண்ட மலாய்க்காரர்களே ஒப்புக்கொள்கின்றனர்.

இந்த உண்மையை ஒப்புக்கொள்ள துருப்பிடித்த மூளைகொண்ட இனவாத – சமயவாத அரசியல்வாதிகள் மறுக்கின்றனர். ஒரு நெருக்கடி வரும்போது இந்த விஷத்தை அவர்கள் கட்டவிழ்த்து விடுகின்றனர்.

நடப்பு சுழ்நிலையில் அரசியல்வாதிகள் அவர்களின் சொந்த இனத்திற்காக மட்டுமே போராடிக் கொண்டிருக்கின்றனர். தங்களின் அரசியல் வாழ்க்கை அஸ்தமனம் ஆகிவிடக்கூடாது என்பதற்காக அவர்கள் கையில் எடுத்திருப்பது தான் இந்த இன-சமய சித்தாந்தம்.

இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையைத் தடுக்கும் நோக்கத்தில் பதற்றம் எனும் விஷத்தைத் தூவுகின்றனர். இது ஒரு குறுகிய கால சுகம் என்றாலும் சுயநலத்திற்கு இன- சமய சித்தாந்தங்களை உணவின் சுவைக்குச் சேர்த்துக்கொள்ளப்படும் ஊறுகாய் போன்று அவ்வப்போது தொட்டுக்கொள்கின்றனர்.

மக்களை எப்போதும் ஒரு வகையான பீதியில் வைத்தால்தான் தங்களுக்கு வாழ்க்கை என்பதை அரசியல்வாதிகள் தெளிவாகத் தெரிந்துவைத்துள்ளனர்.

இந்த இனவாதமும் சமய துருப்புச் சீட்டு விளையாட்டும் தொடருமாயின் நாடும் மக்களும் முன்னேற்றப் பாதையில் இருந்து பின்தள்ளப்படுவது உறுதி. படைத்த ஆண்டவனால்கூட காப்பாற்ற முடியாது.

நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் பாடுபட வேண்டும் என்ற எண்ணமும் சிந்தனையும் அரசியல்வாதிகளிடம் உதிக்க வேண்டும். மனம் மாறினால் மட்டுமே நாடும் மக்களும் வாழ்வர்! வாழமுடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here