பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிகளில் பதிவோம்

-தமிழுணர்வுகளை விதைக்குமிடம் தமிழ்ப்பள்ளிகளே

என்னுடைய துறை சார்ந்த நண்பர்கள், என்னிடம் ஆச்சரியமாகக் கேட்கும் கேள்வி இதுதான். ஏன் உங்க பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புறீங்க? சீனப் பள்ளிக்கோ தேசியப் பள்ளிக்கோ அனுப்பலாமே?

இப்படிக் கேட்பதில் அந்நிய இனத்தவரைக் காட்டிலும் இந்தியர்களே அதிகம். இன்று என் இரு பிள்ளைகள் ஆரம்ப தமிழ்ப்பள்ளியிலும் கடைக்குட்டி தமிழ்ப் பாலர் பள்ளியிலும் பயில்கிறார்கள் என்று சொல்கிறார் மலேசியா புத்ரா பல்கலைக்கழகத்தில் மருத்துவம் மற்றும் சுகாதார அறிவியல் புலத்தில் நோயியல் துறையில் தலைவராகவும் விரிவுரையாளராகவும் முதன்மை ஆராய்ச்சியாளராகவும் பணியாற்றும் முனைவர் இராஜேஸ் இராமசாமி.

இவர் தாம் வாழ்ந்த நாகலீலை தோட்டத்தில் தமிழ்ப்பள்ளி இல்லாத காரணத்தால் கெடா பாடாங் செராய் விக்டோரியா தோட்டத் தமிழ்ப்பள்ளியில் தொடக்கக் கல்வியைக் கற்றவர். இவரின் துணைவியார் திருமதி சியாமளா சுப்பிரமணியம், சிலிம் ரிவர் தமிழ்ப்பள்ளியில் பயின்றவர்.

இல்லத்தரசி, வரைகலை நிபுணர், இல்லம் சார்ந்த தொழில்முனைவர். பிள்ளைகள்: லலிதா , சிவகார்த்திகேயன் இருவரும் வெஸ்ட் கண்ட்ரி (பாராட்) தமிழ்ப்பள்ளியில் பயில்கிறார்கள். பைரவி, ஸ்ரீசக்தி தமிழ்ப் பாலர்பள்ளியில் பயில்கிறாள்.

எல்லாப் பள்ளிகளிலும் ஒரே பாடத்திட்டத்தைத்தான் பயிற்றுவிக்கிறார்கள். வெறும் பாடத்திட்டங்கள் மட்டிலுமே மாணவர்களை மாண்புள்ள மானிடர்களாக உருவாக்குவதில்லை. குடும்ப, சமூக, ஆன்மீக வாழ்விற்கான விதை சிறு வயதிலேயே விதைக்கப் படவேண்டும்.

இந்த விதைப்புப் பணியைச் செவ்வனே செய்யுமிடம் தமிழ்ப்பள்ளிகளே. கல்வி கேள்விகளைக் கற்பதன் ஊடே பண்பாட்டுக் கல்வியும் சமயப் போதனைகளும் இளம் மாணவர்களுக்கு போதிய அளவில் வழங்கப்படவேண்டும்.

அன்னை, தந்தை, ஆசான், தெய்வம் என்ற வரிசைப்பட்டியலில், தெய்வத்திற்கு முன்பாக ஆசிரியரை வைத்து அழகு பார்த்தது தமிழ்க்கல்விதான். பாடப் போதனைகளில் ஓரிரு குறைகள் இருந்தாலும் பெற்றோரால் அதனைச் சரிப்படுத்திக் கொள்ளமுடியும். வாழ்க்கையில் அடித்தளமாக விளங்கும் நன்னெறிப் பண்புகளையும் கலாச்சாரத்தையும் மத நல்லிணக்கப் போதனைகளையும் இளமனங்களில் ஊன்றும் பெரும்பொறுப்பைத் தமிழ்ப்பள்ளிகளைத் தவிர மற்ற தரப்பினால் ஒருகாலும் செய்ய இயலாது.

அன்று என் தகப்பனார் செய்ததுபோல, பெற்ற பெற்றோருக்கு ஈடாக தத்துப் பெற்றோராக தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் இன்றும் இருப்பதால் என் பிள்ளைகளை நிம்மதியாக தமிழ்ப்பள்ளி ஆசிரியப் பெருந்தகைகளிடம் விட்டுச்செல்கிறேன் என்று முனைவர் இராஜேஸ் கூறினார்.

தமிழ் தமிழர்களின் உயிர் மூச்சு

  • கவின்மலர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here