தமிழ்ப்பள்ளிகளைக் காப்போம்

தலைநிமிர்ந்து வாழ, தாய்மொழி வழி
கற்றலே சாலச் சிறந்தது

கூலிம்-

சிந்தனை ஆற்றலை வளர்ப்பதும் படைப்புத் தன்மையை உருவாக்குவதும், நாகரீகமான சமூக மனிதராக மாற்றுவதும் சமூகப் பண்பாட்டைக் காப்பாற்றிக் கொண்டே அதை மேம்படுத்துவதும் சிறந்த கல்வியின் நோக்கமாகும்.

தாய்மொழி தான் சிந்திக்கும் திறனின் திறவு கோலாக இருக்கிறது என்றால் அது மிகையாகாது. எந்த மொழியைக் கற்றாலும், எத்தனை மொழிகளைக் கற்றாலும் ஒருவரின் சிந்தனை உருவெடுப்பது தாய்மொழியில் தான் என்கிறார் குரோ தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் திருமதி செல்வராணி முனியாண்டி.

மனிதனது சிந்தனைத் திறனுக்கும் தாய்மொழிக்கும் தொடர்பு இருக்கிறது. தாய் மொழியிலேயே ஒருவர் அதிகம் சிந்திக்க முடியும். மனித ஆற்றலை வளமையாக்கவும் ஒருவரது படைப்பாற்றலை அதிகப்படுத்தவும் தாய்மொழிக் கல்வியால் மட்டுமே முடியும்.

இதனை நிரூபிக்கும் வகையில் இவர் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களும் ஆசிரியர்களும் பல அனைத்துலக புத்தாக்கப் போட்டிகளில் கலந்து கொண்டு சாதனைகள் படைத்து வருகின்றனர்.

இவரது கணவர் கணேசன் கிருஷ்ணன் ஆரம்பக் கல்வியை மலாய்ப்பள்ளியில் தொடங்கினாலும் தமிழின் மேல் கொண்ட பற்றினால், இவர் தமிழ்மொழியை வாசிக்கவும் எழுதவும் கற்றுக் கொண்டார். 

இவர் குரோ தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரியத் தலைவராகவும் குரோ சுப்பிரமணியர் ஆலயச் செயலாளராகவும், குரோ இந்திய கால்பந்து சங்கத்தின் தலைவராகவும் ம.இ.கா. பாடாங் தாமாட் கிளையின் தலைவராகவும் பொறுப்பு வகித்து தமிழுக்கும் இந்திய சமுதாயத்திற்கும் சேவையாற்றி வருகிறார்.

இவர்களது மூத்த மகன் டாக்டர் டினேஷ்குமார் கணேசன் குரோ தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவராவார். இவர் தற்போது நிபுணத்துவ மருத்துவராக கிளாந்தான் மாநிலத்தில் பணியாற்றுகிறார்.
இவர்களது இரண்டாவது மகன் விக்னேஷ் கணேசன் தலைநகரில் மின்சார பொறியியலாளராகவும் இளைய மகள் லலிதா கணேசன் பினாங்கு மாநிலத்தில் ரசாயன பொறியியலாளராகவும் பணியாற்றுகின்றனர். 

தாய்மொழிக் கல்வி கற்பதனால் தொழில் துறை மற்றும் பொருளாதாரம் போன்றவற்றில் வெற்றி பெறமுடியும் என்பதை இது நிரூபிக்கிறது. தாய்மொழிக் கல்விதான் இவர்களது வாழ்க்கையை செம்மைப்படுத்தியது.

இந்நாட்டில் நாம் தலைநிமிர்ந்து வாழ தாய்மொழி வழி கற்றலே சாலச் சிறந்தது. 

எனவே, இந்நாட்டில் வாழ்கின்ற தமிழ் மக்கள் அனைவரும் தங்களின் குழந்தைகளைத் தமிழ்ப்பள்ளிக்கே அனுப்ப வேண்டும் என்று திருமதி செல்வராணி முனியாண்டி கேட்டுக்கொள்கின்றார்.

தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு ! தமிழ் மொழியே நமது மூச்சு!

 

கே. ஆர். மூர்த்தி

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here