ஏ.ஆர்.ரஹ்மானை நடிக்க சம்மதிக்க வைத்தது எப்படி?

 – அனுபவம் பகிரும் இயக்குநர்

மோகன்லால் நடித்து வரும் படம் ‘ஆராட்டு’ படத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை நடிக்க சம்மதிக்க வைத்ததன் பின்னணியை விவரித்திருக்கிறார், அப்படத்தின் இயக்குநர் பி.உன்னிகிருஷ்ணன்.

தமிழில் சிவகார்த்திகேயனின் ‘அயலான்’, சிம்பு – கெளதம் மேனன் இணையும் படம், இதேபோல் பாலிவுட்டில் சில படங்கள், ஹாலிவுட்டில் ஒரு படம் என பிசியாக இருந்து வருகிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.

ஏற்கெனவே ஒரு படத்தை தயாரிக்கும் திட்டத்திலும் ரஹ்மான் இருந்து வருகிறார். இந்த நிலையில்தான் முதல்முறையாக நடிகராக களமிறங்க இருக்கிறார் என செய்திகள் சமீபத்தில் வெளிவந்தன. அதுவும் தமிழ், இந்தி சினிமாவில் கிடையாது; மலையாள சினிமாவில் நடிகராக களமிறங்க இருக்கிறார் என்று கூறப்பட்டது.

இயக்குநர் பி.உன்னிகிருஷ்ணன் என்பவர் இயக்கத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்து வரும் படம் ‘ஆராட்டு’ படத்தில்தான் மோகன்லால் உடன் இணைந்து ஏ.ஆர்.ரஹ்மான் இணைந்து நடிக்க இருப்பதாக மலையாள சினிமா வட்டாரங்கள் தகவலை வெளியிட்டன. இந்த தகவல் இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மோகன்லால், பி உன்னிகிருஷ்ணன் உடன் ஏ.ஆர்.ரஹ்மான் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. இதன்மூலம் ஏ.ஆர்.ரஹ்மான் முதல்முறையாக நடிகராக திரையில் தோன்றவிருக்கிறார்.

இதற்கிடையே, `ஆராட்டு’ படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் எப்படி இணைந்தார் என்பதை அப்படத்தின் இயக்குநர் பிரபல மலையாள ஊடகமான ‘மனோரமா’வுக்கு வெளிப்படுத்தியுள்ளார்.

ஆராட்டு’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் சார் தோன்றுகிறார். படத்தின் கதையானது அவரின் கதாபாத்திரத்தை சுற்றி நடக்கிறது. கதையின் மையமே அந்தக் கதாபாத்திரம் வழியாகத்தான் இயங்கும். இது தொடர்பான கூடுதல் விவரங்களை இப்போது வெளியில் சொல்ல முடியாது.

ஒரு பாட்டில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க வைப்பது போன்றது இல்லை அவரின் கேரக்டர். அவர் நடிக்கும் குறிப்பிட்ட காட்சி இல்லாவிட்டால், படத்தின் ஸ்கிரிப்ட் யதார்த்தமாக இருக்காது.

ஸ்கிரிப்டில் இதுபோன்ற ஒரு காட்சி வந்தபோது, அது சாத்தியமா என்று எல்லோரும் கவலைப்பட்டனர். இதற்கு பல காரணங்கள் உள்ளன. முதலில் ரஹ்மான் சார் மிகவும் பிஸியான நபர். அவரின் தேதி பெறுவது எளிதானது அல்ல. மற்றொன்று அவர் இதுவரை நடித்து பழக்கப்பட்ட நபர் கிடையாது.

அதனால் இதற்கு சம்மதம் தெரிவிப்பாரா என்ற கவலையில் படக்குழுவை சேர்ந்த அனைவரும் இருந்தோம். ஆனால் நாம் இதை முயற்சி செய்து பார்ப்போம் என்று அனைவருக்கும் ஊக்கம் கொடுத்து தேற்றியவர் மோகன்லால் சார்தான்.

அவரும் ரஹ்மான் சாரை நடிக்க வைக்க வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தார். அவர் கொடுத்த நம்பிக்கையில் ரஹ்மான் சார் அணுகினோம். `நடிப்பதில் எனக்கு ஆர்வமில்லை’ என்பதே ரஹ்மான் எங்களுக்கு கொடுத்த முதல் பதில். ஆனால் நாங்கள் விடவில்லை. படத்திற்கான ஸ்கிரிப்டை அவருக்கு அனுப்பினோம். பல முறை அவருடன் பேசினோம். நிறைய முயற்சி செய்தோம்.

இறுதியில் அவரின் கேரக்டர் இல்லாமல் படம் சாத்தியமில்லை என்பதை உணர்ந்துகொண்ட ரஹ்மான் சம்மதம் தெரிவித்தார். அவர் நடிக்க ஒப்புக்கொண்டதற்குப் பின்னால் இன்னொரு காரணமும் இருக்கிறது.

அவர் மலையாள திரையுலகத்துடன் மிகவும் நெருக்கமானவர். அர்ஜுனன் மாஸ்டர் ,  ஜான்சன் மாஸ்டர் ஆகியோருடன் அவருக்கு சிறந்த தனிப்பட்ட உறவு இருந்தது. மோகன்லாலின் ‘யோதா’ படத்திற்கும் முதல் முறையாக இசையமைத்தவர் ரஹ்மான் தான்.

ரஹ்மான் ஒப்புக் கொள்ளாவிட்டால் அவருக்கு பதிலாக பல முக்கிய நபர்கள் ஒத்துழைக்க ஒப்புக்கொண்டனர். அது யார் என்பதை வெளிப்படுத்த முடியாது. ஆனால் அவர்களில் எவரும் ஏ.ஆர்.ரஹ்மானை மாற்றவோ, அல்லது அவரின் கேரக்டருக்கு பொருத்தமாக இருக்க முடியாது என்பதால் அவருக்காக காத்திருந்தோம்.

இந்த காத்திருப்புக்கான காரணம் ஏன் என்று படம் பார்க்கும்போது பார்வையாளர்களுக்கு புரியும். அவர்கள் இருவரும் நடித்துள்ள முக்கிய காட்சி பெரும் செலவில் எடுக்கப்பட்டுள்ளது. எங்கள் முயற்சிகள் பலனளிக்கும் என்று நம்புகிறோம்” என்று பேசியுள்ளார்.

ரஹ்மான் நடித்துள்ள காட்சி சென்னையில் வைத்து படமாக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரமாண்ட செட் கோடிகளில் செலவழித்து எடுத்துள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here