சர்வதேச விண்வெளி நிலையத்தில் காணப்பட்ட பாக்டீரியா

– தமிழக விஞ்ஞானியின் பெயர் சூட்டல்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் காணப்பட்ட ஒரு வகை பாக்டீரியாவுக்கு தமிழக விஞ்ஞானி சையது அஜ்மல் கானின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளால் விண்ணில் சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு இடங்களில் இருந்து 4 இன பாக்டீரியாக்கள் கண்டுபிடிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பான ஆய்வுப் பணியில் நாசாவுடன் ஹைதராபாத் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும் பங்கேற்றுள்ளனர்.

இதில் ஒரு வகை பாக்டீரியா, மெத்திலோரூப்ரம் ரோடீசியனம் ஆக அடையாளம் காணப்பட்டாலும் மற்ற வகை பாக்டீரியாக்கள் அடையாளம் காணப்படாமல் இருந்தது.

இந்நிலையில் தற்போது புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள ஒரு வகை பாக்டீரியாவை தமிழகத்தின் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியராக இருக்கும் சையத் அஜ்மல் கான் பெயரில் ‘மெத்திலோ பாக்டீரியம் அஜ்மலி’ என்று அழைக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.

உருளை வடிவிலான இந்த பாக்டீரியா, வளிமண்டல நைட்ரஜன் வாயுவை தாவரங்கள், பிற உயிரினங்கள் பயன்படுத்தக் கூடிய வடிவமாக மாற்றுவது, தாவர வளர்ச்சி, தாவர நோய்க்கிருமிகளுக்கு எதிரான செயல்பாடு ஆகியவற்றுடன் தொடர்புடையது ஆகும்.

எனவே இந்த பாக்டீரியா விண்வெளியில் பயிர்களை வளர்ப்பதற்கான திறவுகோலை கொண்டிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். என்றாலும் இதனை நிரூபிக்க தொடர் பரிசோதனைகள் தேவைப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக் கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here