மியான்மரில் அசாதாரண நிலை

-இலங்கையர்கள் குழுவொன்று விடுத்துள்ள அவசர கோரிக்கை

மியான்மரில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக அங்கு வசிக்கும் 33 இலங்கையர்கள் தம்மை மீளவும் இலங்கைக்கு அழைக்குமாறு அவசர கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுமார் 206 இலங்கையர்கள் தற்போது மியான்மரில் வசித்து வருவதாக வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன, அவர்களில் 33 பேர் மீளவும் தம்மை இலங்கைக்கு அழைக்குமாறு கோரியுள்ளனர்.

இது குறித்து கொழும்பு ஆங்கில் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மியான்மர் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியதுடன், அரச தலைவர் ஆங் சான் சூகியையும் கைது செய்துள்ளனர். இதனால் பெப்ரவரி தொடக்கத்தில் இருந்து மியான்மரில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

அதன் பின்னர் நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் வெடித்துள்ளதுடன், ஆங் சான் சூகி விடுதலை செய்யப்பட வேண்டும்,  பொதுமக்கள் ஆட்சியை மீட்டெடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர்.

இராணுவ ஆட்சிக்கு பின்னர் மார்ச் 27  ஆம் திகதி மிகவும் மோசமான நாளாக மாறியது. அன்றைய தினம் மட்டும் 114 பேர் இராணுவத்தால் கொல்லப்பட்டனர். இதில் ஏழு குழந்தைகள் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியான்மரில் ஒரு குறிப்பிட்ட இனக்குழுவின் ஆயுத இயக்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகள் மீது மியான்மர் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியிருக்கிறது.

இதன் காரணமாக, மியான்மரின் Karen மாநிலத்திலிருந்து சுமார் 3,000 மக்கள் அண்டை நாடான தாய்லாந்தில் தஞ்சமடைந்திருப்பதாக அந்நாட்டு உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Karen பெண்கள் அமைப்பின் அறிக்கைப்படி, அம்மாநிலத்தின் Mutraw மாவட்டத்தில் 5 இடங்களில் இத்தாக்குதல் நடந்திருக்கிறது. இத்தாக்குதல் இடம்பெயர்ந்த முகாமின் மீதும் நடத்தப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில், காட்டில் மறைந்திருந்து பின்னர் தாய்லாந்தில் சுமார் 3000 மியான்மரிகள் தஞ்சமடைந்திருப்பதாகக் கூறப்படுகின்றது.

மியான்மரின் மிகப்பெரிய ஆயுத இயக்கமாக கருதப்படும் Karen தேசிய ஒன்றியத்தின் மீது மியான்மர் ராணுவம் நடத்திய முதல் வான்வழித் தாக்குதல் இது என ஜகார்த்தபோஸ்ட் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

மியான்மரின் மூன்றில் ஒரு பகுதியை, குறிப்பாக அந்நாட்டின் எல்லைப் புறங்களை பல கிளிர்ச்சி குழுக்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன.

மியான்மருக்கும் பல்வேறு இனங்களைச் சேர்ந்த ஆயுதக் குழுக்களுக்கும் பல ஆண்டுகளாக நீடித்து வரும் முரண்பாட்டின் காரணமாக தாய்லாந்தில் ஏற்கனவே 90,000 பேர் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.

ஏற்கனவே ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதால், பலர் உயிருக்கு வெளியேறி வரும் நிலையில் தற்போது இன ரீதியான பிரச்சினைகளை தூண்டும் செயலில் ராணுவம் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இதனால் மியான்மரின் சூழல் மேலும் மேலும் மோசமடையக்கூடும் எனக் கருதப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here