கோவிஷீல்ட் மருந்தை 9 மாதங்கள் வரை பயன்படுத்தலாம்

டில்லி

கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்ட் மருந்தை 6 மாதங்களுக்குப் பதிலாக 9 மாதங்கள் வரை பயன்படுத்தலாம் என இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் ஆணையம் அறிவித்துள்ளது

 

தற்போது இந்தியாவில் இரு கொரோனா தடுப்பூசி மருந்துகளுக்கு அரசு அவசரக்கால அனுமதி அளித்துள்ளது. அவற்றில் ஒன்றான கோவாக்சின் மருந்து இந்திய நிறுவனமான பாரத் பயோடெக் கண்டுபிடித்துத் தயாரிக்கும் மருந்தாகும். மற்றொன்றான கோவிஷீல்ட் மருந்து ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம், ஆஸ்டிரா ஜெனிகாவின் கண்டுபிடிப்பாகும்.

 

இந்த கோவிஷீல்ட் மருந்து இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மருந்தை 6 மாதங்களுக்குள் பயன்படுத்த வேண்டும் எனவும் அதற்கு மேல் சேமித்து வைக்க கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டது.

மேலும் முதல் டோஸ் போட்டுக்கொண்ட 4 வாரங்கள் முதல் 6 வாரங்களில் இரண்டாம் டோஸ் போட வேண்டும் எனவும் கூறப்பட்டது.

 

அதன் பிறகு ஆய்வுகளின் அடிப்படையில் கோவிஷில்ட் மருந்து இரண்டாம் டோஸ் 6 வாரங்கள் முதல் 8 வாரங்களில் போட்டுக் கொள்ளலாம் என மாநில அரசுக்கு மத்திய அரசு சுகாதாரத்துறை பரிந்துரை செய்தது.

 

தற்போது கோவிஷீல்ட் மருந்து உபயோக காலக்கெடுவை 6 மாதங்களுக்குப் பதிலாக 9 மாதங்கள் வரை சேமித்து பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இது குறித்து இந்திய மருந்து கட்டுப்பாளர் ஆணையம், ‘ கோவிஷீல்ட் தடுப்பூசியை பெயர் ஒட்டப்படாத 5 மில்லி லிட்டா் உள்ளிட்ட பல்வேறு அளவிலான கண்ணாடி குப்பிகளில் அடைத்து, 9 மாதங்கள் வரை சேமித்து வைக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

 

அவ்வாறு கூடுதல் காலம் சேமித்துவைக்கப்படும் தடுப்பூசிகள் குறித்த விவரங்களைப் பிரிவு வாரியாக டிசிஜிஐ அலுவலகத்துக்கும், இமாசல பிரதேசம் கசெளலியில் உள்ள மத்திய மருந்துகள் ஆய்வகத்துக்கும் அனுப்பி வைக்கவேண்டும்’ என்று தெரிவித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here