
ரத்தத்தின் மீது சத்தியப்பிரமாணம் செய்து குண்டர் கும்பல்களில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருக்கிறது.
கேங் கும்பல் புக்கிட் ராஜரீ பள்ளி மாணவர்களுக்கு வலைவிரித்து வருகிறது. இக்கும்பலில் 100 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களுள் 10 பேர் மாணவர்கள்.
60 பேர் 20 வயதிற்குட்பட்டவர்கள். 20 பேர் 30க்கும் 40க்கும் இடைப்பட்ட வயதினர். 10 பேர் 40க்கும் 50க்கும் இடைப்பட்ட வயதினர் என்று சிலாங்கூர் மாநிலப் போலீஸ் தலைவர் கமிஷனர் டத்தோ அர்ஜுனாய்டி முகமட் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
பணத்தையும் அதிகாரத்தையும் காட்டி இக்கும்பல் இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கு வலைவிரித்து வருகிறது. இள ரத்தம் பட்டென வீழ்ந்து விடுகிறது.
ஆர்வத்தோடு வரும் மாணவர்கள் அவ்வளவு எளிதில் சேர்ந்துவிட முடியாது. உறுப்பினர்களாக ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன் நடக்கும் ஒரு சடங்கில் ரத்தச் சத்தியப்பிரமாணம் செய்திட வேண்டும்.
இக்கும்பல் குறிவைத்திருக்கும் சில இடைநிலைப்பள்ளிகளை போலீஸ் அடையாளம் கண்டிருக்கிறது. போலீசாரின் கழுகுப் பார்வை மாணவர்களைக் காக்கும்; காக்க வேண்டும்.
கடந்த செப்டம்பர் மாதம் ஷா ஆலமில் உள்ள ஒரு மனமகிழ் மையத்தில் நடந்த சண்டையைத் தொடர்ந்து போலீஸ் 50 பேரை மடக்கிப் பிடித்தது. இவர்களிடம் நடத்தப்பட்ட புலன் விசாரணையில் இந்த மாணவர் சேர்ப்புத் திட்டம் வெளிச்சத்திற்கு வந்தது.
அந்த மனமகிழ் மையத்தின் உரிமையாளரிடம் மாத பாதுகாப்புப் பணம் கேட்டு இக்கும்பல் மிரட்டியிருக்கிறது. உரிமையாளர் பிடிவாதமாக மறுத்திருக்கிறார். அதன் விளைவு இக்கும்பல் அம்மையத்தை அடித்து நொறுக்கி நாசப்படுத்தி இருக்கிறது.
சிலாங்கூர் கிரிமினல் புலனாய்வு இலாகா (சிஐடி) ஒரு தனிப்படையை அமைத்து சம்பவத்தைத் துப்புத்துலக்கியது. அதில் கேங் 24 புக்கிட் ராஜா சிக்கியது.
சண்டை, கலகம், கொள்ளை, வழிப்பறி என்று கிள்ளான் பள்ளத்தாக்கில் நிகழ்ந்த பல குற்றச் சம்பவங்கள் தொடர்பில் இக்கும்பலின் 50 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
19 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. 20 பேர் குற்றச்செயல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 11 பேர் தடுப்புக் காவலில் உள்ளனர்.
இவர்கள் திட்டமிட்டு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். கொள்ளை, திருட்டு, பாதுகாப்புச் சேவை, மசாஜ் மையங்கள், சட்டத்திற்குப் புறம்பான சூதாட்ட மையங்கள் வழி பணம் பெற்று வருகின்றனர்.
கேங் லானூன் மேரா பிளேக் கும்பலை வளைத்துப் பிடிக்கவும் போலீஸ் தனிப்படை அமைத்து துப்புத் துலக்கி வருகிறது. மிஸ்டர் ஏ எனும் ஆசாமி இக்கும்பலுக்குத் தலைவன்.
பெற்றோர், தங்களின் பிள்ளைகளின் நடமாட்டத்தில், போக்கில் மாற்றங்கள் ஏதும் தென்பட்டால் அப்படியே விட்டுவிடாமல் என்ன, ஏது என்று அவர்களிடம் விசாரிப்பதோடு பள்ளிக்குச் சென்று விசாரிக்கவும் வேண்டும். தொடர் கண்காணிப்பும் அவசியமாகும்.
பிள்ளைகள் நம் சொத்துகள். குண்டர் கும்பல்களில் சேர்ந்து சீரழிந்து போவதை எந்தப் பெற்றோரும் விரும்ப மாட்டார்கள். வரும் முன் காப்பதே விவேகம் என்பதை பெற்றோர் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
காலங்கடந்த எந்த விவகாரமும் பாழ்பட்டுப் போகும். பிள்ளைகளின் எதிர்காலமும் வாழ்க்கையும் அப்படித்தான்.
– பி.ஆர். ராஜன்






















