மக்கள் மனம் மாறவேண்டும்

கோவிட்-19 நான்காவது அலை மலேசியாவைத் தாக்கும் என்பது உண்மையாகி விடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஆர்ப்பரிக்கத் தொடங்கி இருக்கிறது.

தொற்று கண்டவர்கள் எண்ணிக்கை மூன்று இலக்கத்திற்கு வீழ்ச்சி கண்டபோது நிம்மதிப் பெருமூச்சு விட்ட மக்கள், அது சன்னஞ்சன்னமாக உயர்வு கண்டு ஆகக்கடைசியாக நேற்று 2,148ஆக பதிவாகி இருப்பது புதிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சிலாங்கூர், கிளாந்தான், சரவாக் ஆகிய மூன்று மாநிலங்களில் கோவிட்-19 தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருக்கிறது.

கோலாலம்பூரிலும் ஜோகூரிலும் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. கிளாந்தானில் 5 மாவட்டங்களில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (எம்சிஓ) அமல்படுத்துவதற்கு அரசாங்கம் தயாராகி வருகிறது.

நாடு முழுவதும் எம்சிஓ இனியும் அமல்படுத்தப்படமாட்டாது என்று பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தெரிவித்திருந்தாலும் நிலைமை கட்டுமீறிப் போனால் அது தவிர்க்க முடியாததாகி விடும்.

கோவிட்-19 தடுப்பூசி விநியோகத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில் தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கக்கூடும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரித்திருப்பதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

இந்த நான்காவது அலையை முறியடிப்பதற்கு மலேசியர்கள் அரசாங்கம் விதித்திருக்கும் எஸ்ஓபி விதிமுறைகளைத் தொடர்ந்து பின்பற்றி கடைப்பிடிக்க வேண்டும். அதே சமயத்தில் அவசியமற்ற அறிவிப்புகளால் மக்களைக் குழப்பும் அறிக்கைகளை – அறிவிப்புகளை சம்பந்தப்பட்ட துறையினர் தவிர்க்க வேண்டும்.

மேலும் சட்டம் என்பது அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். அமைச்சர்களுக்கு ஒரு மாதிரியும் சாமானிய மக்களுக்கு வேறு மாதிரியும் சட்ட அமலாக்கம் இருக்கக்கூடாது.

கொரோனாவுக்கு அமைச்சர் என்றும் தெரியாது… சாமானியன் என்றும் தெரியாது. அதற்கு அனைவரும் சமம். எல்லாரையும் அதற்குப் பிடிக்கும்.

தற்போது நாடு முழுவதும் பாசார் ரமலான் திறக்கப்பட்டிருக்கின்ற நிலையில், கட்டுக்கடங்காத மக்கள் கூட்டங்களைக் காண முடிகிறது. மலாய்க்காரர்கள் மட்டுமன்றி சீனர்களும் இந்தியர்களும் அங்கு பெரிய எண்ணிக்கையில் திரள்கின்றனர்.

மக்களின் இந்த மனப்போக்கே கோவிட்-19 தொற்று எண்ணிக்கை அதிகரிப்புக்கு முக்கியக் காரணமாக இருக்கிறது என்று மருத்துவ நிபுணர்கள் கோடிகாட்டி வருகின்றனர்.

பொதுமக்கள் ஒத்துழைக்க மறுத்தால் இந்தப் பாசார் ரமலானில் மிகக்கடுமையான விதிமுறைகளை அமல்படுத்த வேண்டியிருக்கும் என்று அரசாங்கம் அறிவித்திருப்பதானது அதன் கடுமையை உணர்ந்திருப்பதனால் தான்.

இந்நிலையில் விதிமீறல்களுக்கு தண்டம் அல்லது அபராதம் வழங்கும் அதிகாரம் ஊராட்சித் துறையினருக்கு விரிவுபடுத்தப்படும் என்று மூத்த அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அறிவித்திருக்கிறார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த சில தினங்களாக மிகக்கடுமையாக உயர்ந்து வருவதோடு மட்டுமன்றி தீவிர கண்காணிப்புப் பிரிவில் சேர்க்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மரண எண்ணிக்கையும் உயர்வில்தான் இருக்கின்றது.

மாநிலங்களுக்கிடையிலான பயண அனுமதி, பெரும் திரளாகக் கூடுவது இப்புதிய பாதிப்புகளுக்கு முக்கியக் காரணமாக இருப்பதை மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டி இருக்கின்றனர்.

மலேசியாவில் மட்டுமன்றி அமெரிக்கா, கனடா, இந்தியா, பிரேசில், தென் கொரியா, பிரிட்டன் போன்ற நாடுகளிலும் கொரோனா மீண்டும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இது மிக மோசமான நிலையை எட்டும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்திருக்கிறது.

மாற்றம் ஒன்றே மாறாதது என்பார்கள். இவ்விவகாரத்தில் மக்கள் மாறா விட்டால் எதுவும் மாறப் போவது இல்லை.

– பி.ஆர். ராஜன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here