ஏப்.30ஆம் தேதிக்குள் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளியில் பதிவு செய்க

மலேசியத் தமிழ் அறவாரியம் வலியுறுத்தல்

கோலாலம்பூர்-
மலேசியாவில் நமக்குக் கிடைத்தருக்கும் அரியதொரு வாய்ப்பு, தமிழும் தமிழ்ப்பள்ளிகளும் தான். தமிழ்மொழியும் பண்பாடும் ஒருங்கே வளர வழிகோலும் தளமாகத் தமிழ்ப்பள்ளிகள் விளங்குகின்றன என்று மலேசியத் தமிழ் அறவாரியம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

200 ஆண்டையும் கடந்து தமிழ்க்கல்வி நம் மலையக மண்ணில் வேரூன்ற அடித்தளம் அமைத்தது தமிழ்ப்பள்ளி அன்றி வேறொன்றுமில்லை.

தொடக்கத் தமிழ்ப்பள்ளிகள் உள்ள நாடு நம் மலேசியா மட்டுமே என்ற பெருமையும் நமக்குள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் ஏறத்தாழ 13,000 முதல் 13,500 மாணவர் வரை தமிழ்ப்பள்ளியில் முதலாமாண்டைத் தொடர்ந்து வந்துள்ளனர் எனப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

கடந்த ஆண்டில் இவ்வெண்ணிக்கை 12,700 ஆக குறைந்துள்ளது. பெற்றோர்களின் விழிப்புணர்வும் மொழியுணர்வுமே தமிழ்ப்பள்ளியில் மாணவர் எண்ணிக்கையை உயர்த்த துணைசெய்யும்.

நமக்கான நல்வாய்ப்பை நம் பெற்றோர்கள் சீரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமெனத் தமிழ் அறவாரியம் கேட்டுக் கொள்கிறது.

தமிழ்ப்பள்ளிகளில் நம் மாணவர்களின் எண்ணிக்கை கூடினால் தமிழ்ப்பள்ளிகளின் தரம் உயரும்; வசதிகள் பெருகும்; வேலை வாய்ப்பும் கூடும் என்பதை நம்மினப் பெற்றோர்கள் உணர வேண்டும்.

இன்றைய நிலையில் தமிழ்ப்பள்ளி மாணவர்களும் உலகத் தரத்தில் சாதனைகளைப் பதிக்கின்றனர். நம் பள்ளி மாணவர்கள் கல்விகேள்விகளில் சிறந்து விளங்குவதோடு புறப்பாடத்திலும் பல வெற்றிகளைப் பதித்து வருவது பெருமைக்கான செய்தி.

தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களும் ஈகவுணர்வோடு கடமையாற்றி தமிழ்ப்பள்ளியைத் தரமுயர்த்தி வருகின்றனர் என்பதும்  பற்றின் அடையாளமாகவும், பண்பின் நெறியாகவும் விளங்கிகிறது.

இத்தனை வாய்ப்பும் வசதியும் இருப்பதாலும் தமிழ் என்ற உணர்வோடு தமிழ்ப்பள்ளியே நம்தேர்வாக அமைய வேண்டும்.

முதலாமாண்டு பதிவு  30.4.2021ஆம் நாளோடு முடிவுக்கு வருவதால் இன்னும் பதியாதவர்களும் பிற பள்ளியில் பதிந்தவர்களும் தமிழ்ப்பள்ளியைத் தேர்வாகக் கொள்வது அறிவுடைமையென தமிழ் அறவாரியம் கருதுகின்றது.

விரைந்து செயல்படுக , உணர்ந்து விரைக. காலம் நமக்காக காத்திருக்காது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here