மெந்தகாப் தமிழ்ப்பள்ளியின் சாதனை

-தமிழிருக்க கவலையில்லை !

மெந்தகாப்-
தாய்மொழியான தமிழ்மொழியை வளர்க்க வேண்டும். அது தொடர்ந்து நம் நாட்டில் பாதுகாக்கப்பட வேண்டும் என பல தரப்பினர் அயராது போராடி வருகின்றனர் .

குறிப்பாக மக்கள் ஓசை நாளிதழ்  முக்கியப் பங்காற்றி வருகின்றது. நமது இந்தியப் பெற்றோர் தங்களுடைய பிள்ளைகள் தமிழ்ப்பள்ளியில் கல்வியைத் தொடங்கினால் அவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையாது என்ற தவறான சிந்தனையைக் கைவிட வேண்டும் என்று தமிழ்ப்பற்றாளர் நா.கேசவன் கூறினார்.

தமிழ்ப்பள்ளியில் கல்வி பயின்று பல போராட்டங்களைச் சந்தித்து தற்போது கட்டுமானத் துறையில் தொழிலதிபராகவும் ஒரு சமூகச் சேவையாளராவும் விளங்கி வருகிறார் என்பதுடன் தமிழ்ப்பள்ளிகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருகின்றார்.

மெந்தகாப் கல்லுக்கோரி ஸ்ரீ மஹா காளியம்மன் ஆலயத் தலைவரும் தாமான் கே. எஸ்.எம். மஇகா கிளைத் தலைவருமான நா.கேசவன் தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கும் நல்ல நோக்கத்தில் இல்லந்தோறும் மக்கள் ஓசை திட்டத்திற்கு இங்குள்ள மெந்தகாப் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு நாள் ஒன்றுக்கு 10 மக்கள் ஓசை பிரதிகளுக்கான மூன்று மாத செலவினத்தை ஏற்றுக் கொண்டார்.

குறிப்பாக நாட்டிலுள்ள தமிழ்ப்பள்ளிகளில் முதலாம் ஆண்டு மாணவர்கள் எண்ணிக்கையை உயர்த்த , தமிழ்ப்பள்ளியே நமது தேர்வாக இருக்கட்டும் தமிழ்ப் பள்ளிகளைக் காப்போம் எனும் சுலோகத்திற்கு மக்கள் ஓசை நாளிதழ் முயற்சியை தாம் பெரிதும் பாராட்டுவதாகவும் பெருமிதம் கொள்வதாகவும் குறிப்பாக மக்கள் ஓசை நிர்வாகம், ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்வதாகவும் கேசவன் தெரிவித்தார்.

அண்மையில் இந்தோனேசியத் தலைநகர் ஜாகர்த்தாவில் நடைபெற்ற 2021ஆம் ஆண்டுக்கான இளம் ஆய்வாளர்கள் அறிவியல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாணவர்களுக்கும் மாணவர்களை வழி நடத்திய தலைமையாசிரியர் திருமதி ருக்குமணி அமிர்சிங், ஆசிரியர்கள் திருமதி வாசுகி, திருமதி ஷர்மிளா, குமாரி ராஜலெட்சுமி ஆகியோருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார் கேசவன்.

பி.ராமமூர்த்தி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here