இளைப்பாறட்டும் ஆன்மா

நல்ல மனிதர் நாகேன்   

ஈப்போ, மெனோரா சுரங்கப்பாதைக்கு அருகில் வடக்கு – தெற்கு நெடுஞ்சாலை 263.3ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்து மலாய் சமூகத்தின் கவனத்தை ஈர்த்து கண்ணீர் சொரிய வைத்திருக்கிறது.

தினமும் சாலை விபத்துகள் நிகழ்கின்றன – உயிர்களும் பறிபோகின்றன. எல்லாமே நம் கவனத்தை ஈர்ப்பதில்லை. ஆனால், இந்தக் குறிப்பிட்ட ஒரு விபத்து ஒட்டுமொத்த மலேசியர்களையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

ஒரு மலாய்ப் பெண்மணியைக் காப்பாற்ற சென்ற 22 வயது இளம் இந்திய இளைஞர் தன் இன்னுயிரைத் தந்தது கண்டு மலாய் ங்மூகம் கண்ணீர் வடித்தது சமுதாயத்தைத் தலைநிமிர வைத்துள்ளது. பொல்லாத சமூகம், குண்டர் கும்பல், அடாவடிக்காரர்கள் என்ற களங்கத்தைப் போக்கும் வகையில் அவர்களின் கண்ணீர் அமைந்திருந்தது.

எல்லாவற்றுக்கும் மேலாக ஈப்போ போலீஸ் தலைவர் ஏ. அஸ்மாடி அப்துல் அஸிஸ் நேரில் வந்து நாகேந்திரன் த/பெ கஜேந்தரன் நல்லுடலுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியது மரியாதையின் உச்சமாகத் திகழ்ந்தது.

தங்களின் ஒரே பிள்ளையைப் பறிகொடுத்துவிட்டு துயரம் தாங்காமல் பரிதவித்துக் கொண்டிருந்த அவரின் பெற்றோருக்கு இதயத்தைத் தொடும் வார்த்தைகளால் ஆறுதல் தெரிவித்து இறுதிச்சடங்கில் கலந்துகொண்டிருந்தோரின் கண்களில் கண்ணீரைக் கசிய வைத்தது.

நாகேந்திரனின் தைரியம், மனவலிமை, மனிதநேய பண்புகளை அஸ்மாடி மனம் திறந்து பாராட்டினார்.
தாமான் ரிஷாவில் உள்ள நாகேந்திரனின் இல்லத்தில் நடந்த இறுதிச்ச்சடங்கில் அஸ்மாடியுடன் சுப்பிரிண்டென்டன்ட் லீ சுவீ சேர், ஈப்போ மாவட்ட போலீஸ் துணைத்தலைவர் டிஎஸ்பி பரமேஸ்வரன் ஆறுமுகம், மாவட்ட கடுங்குற்ற புலனாய்வுப் பிரிவுத் தலைவர் மற்றும் பல அதிகாரிகள் கலந்துகொண்டு புந்தோங் மின்சுடலை வரை ஊர்வலமாக வந்து தகனக் காரியங்கள் முடியும் வரை இருந்தது நாகேந்திரனின் மனிதநேயத்திற்குக் கிடைத்த உச்ச மரியாதை என்றால் மிகையாகாது.

விபத்தில் சிக்கி நாகேந்திரனால் மீட்கப்பட்ட மரியம்மா தாலிப் (வயது 52) என்ற மலாய்ப் பெண்மணியின் குடும்ப உறுப்பினர்களும் இறுதிச்ங்டங்கில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியது நல்லவன் என்றும் வாழ்வான், நல்லாரின் இதயங்களில் இளைப்பாறுவான் என்பது உண்மையாகிப் போனது.

நாகேன் என்று செல்லமாக அழைக்கப்படும் நாகேந்திரன் சிறு வயது முதலே இளகிய மனம் கொண்டவர். இனம், மதம் பாராது யாருக்காவது ஏதாவது உதவி செய்யாவிட்டால் அவருக்குத் தூக்கமே வராது என்று அவரின் உறவினர் எம். நடராஜா (வயது 62) கண்ணீரோடு நினைவுகூர்ந்தார்.

அந்த விபத்து நிகழ்ந்த இடம் பேராபத்து நிறைந்தது. அடிக்கடி விபத்துகள் நிகழும். பல உயிர்களையும் காவு வாங்கியிருக்கிறது. ஓர் ஆம்புலன்ஸ் டிரைவரான நாகேந்திரன் மருந்துகளை அனுப்பிவிட்டு அப்பகுதியைக் கடக்கும்போது இவ்விபத்தைப் பார்த்திருக்கிறார்.

பள்ளத்தாக்குக் கால்வாயில் விழுந்துகிடந்த பெரோடுவா மைவி காரில் சிக்கிக்கொண்டிருந்த மரியம்மா தாலிப்பை வெளியே கொண்டு வந்தார். அடுத்த நொடி ஒரு வாகனம் நாகேனை மோதித்தள்ளியது. அவர் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே உயிர்நீத்தார். மரியம்மா தாலிப் ராஜா பெர்மாய்சுரி பைனுன் மருத்துவமனை அவசர சிகிச்சைபை் பிரிவில் காலமானார்.

மொத்தம் 5 வாகனங்கள் சம்பந்தப்பட்ட இந்த விபத்தில் இரண்டு ஆடவர்கள் கடுமையான காயங்களுக்குள்ளாயினர். மேலும் அறுவர் சிறு காயங்களுடன் உயிர்தப்பினர்.

முன்னதாக மருந்தை விநியோகம் செய்துவிட்டு தாய்தந்தையுடன் தைப்பிங்கில் சேர்ந்து சாப்பிட்டிருக்கிறார் நாகேன். தாங்களும் உடன் வருவதாகப் பெற்றோர் கூறியிருக்கின்றனர். மறுதலித்து அவர்களைக் கட்டாயப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு தான் மட்டும் தனியாகச் சென்றிருக்கிறார். தனக்கு நிகழப்போகும் விபரீதத்தை முன்கூட்டியே உணர்ந்துவிட்டாரோ என்னவோ?

அண்டை வீட்டைச் சேர்ந்த 60 வயதிற்குட்பட்ட மாக்சிக் சியூ, நாகேனின் உயர்ந்த பண்புநெறிகளை வாயாரப் புகழ்ந்தார்.

இந்த விபத்து – விபரீத செய்தி புகைப்படங்களுடன் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவியதில் மலாய் சமூகத்தினர் நன்றியைக் கண்ணீராகப் பொழிந்தனர்.

வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் உலகம் நம் பெயர் சொல்ல வேண்டும் என்பார்கள். நாகேன் அப்படியே வாழ்ந்து கல்வெட்டில் தம் பெயரைப் பதித்து விடைபெற்றிருக்கிறார். அன்னாரின் ஆத்மா இளைப்பாறட்டும். மீளாத் துயரில் இருந்து பெற்றோர் விரைந்து மீண்டு வரட்டும்.

 

– பி.ஆர். ராஜன்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here