19 தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்குத் திரட்டேடு போட்டி’

நான் செய்தியாளர்  

தாப்பா-

பத்தாங் பாடாங் முவாலிம் மாவட்ட தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் கழகம் மக்கள் ஓசையுடன் இணைந்து தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான திரட்டேடு போட்டியை (Scrapbook Competition) நாளைத் தொடங்குகிறது.

தாப்பாவிலிருந்து தஞ்சோங் மாலிம் வரையில் மாவட்டத்தின் 19 தமிழ்ப்பள்ளிகள் கலந்து கொள்ளும் இத்திட்டம் நாளை (10.5.2021) தொடங்கவிருக்கிறது.

நான் செய்தியாளர்’ எனும் தலைப்பில் மாணவர்கள் 30 நாட்களுக்கு தினம் ஒரு செய்தியை கத்தரித்து ஒட்டி மீண்டும் அச்செய்தியை எழுதி புத்தகமாக தயாரிப்பார்கள்.

இத்திட்டம் மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் பயன்தரும் திட்டமாகவும் இருப்பது மகிழ்ச்சி தருகிறது என பத்தாங் பாடாங் முவாலிம் மாவட்ட தலைமையாசிரியர் கழகத்தின் தலைவரும் சிலிம்ரிவர் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியருமான பழனி சுப்பையா தெரிவித்தார்.

இல்லந்தோறும் தமிழ் நாளிதழ் வாங்கும் வழக்கத்தை மீண்டும் கொண்டு வருதல், நாளிதழ் வாசிக்கும் பழக்கத்தைக் குடும்பங்களில் விதைத்தல், மலேசியாவில் தமிழ் அச்சு ஊடகத்தை அழியாமல் பாதுகாத்தல், தினமும் தமிழில் எழுதும் தொடர்ச்சியை ஏற்படுத்துதல். தமிழ் எழுத்தாற்றலை வளர்த்தல், நாட்டு நடப்பு, பொதுவிசயங்களை அறிந்துகொள்ள வகை செய்தல்,தமிழ் எழுத்துப் படைப்பாளர்களை உருவாக்குதல், மேற்குறிப்பிட்ட நோக்கங்களின்படி சமுதாயத்தில் ஓர் உதாரணமாக திகழ்தல் என சபதம் ஏற்கும் ஒரு பகுதியும் இதில் இடம்பெற்றுள்ள நிலையில் மாணவர்களின் குடும்பத்தினர் இதனைத் தொடர்ந்து வரவேற்பார்கள் என தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதில் 3ஆம் ஆண்டுவரை, 4ஆம் ஆண்டிலிருந்து 6ஆம் ஆண்டு வரை என இரண்டு பிரிவுகளாக போட்டி நடைபெறும். ஒவ்வொரு பிரிவிற்கும் தலா 10 ஆறுதல் பரிசுகளும் 1லிருந்து 5 வரை என 5 வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுத்து மக்கள் ஓசை பரிசுகளை வழங்கவிருக்கிறது.

மேலும், போட்டியில் பங்குபெறும் அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்குவதுடன் சிறப்பாக பங்கேற்ற 3 பள்ளிகளுக்கு சிறப்புச் சான்றிதழும் பரிசுகளையும் வழங்குவதற்கு மக்கள் ஓசை முன்வந்துள்ளது.

ராமேஸ்வரி ராஜா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here