பொதுக் கொள்கைகள் தயாரிப்பு

மறு ஆய்வுக்கு 9 செயற்குழுக்கள்!

கோலாலம்பூர்-
நாட்டின் 14ஆவது பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று 22 மாதங்கள் ஆட்சி செய்த பக்காத்தான் ஹராப்பான் பொதுக் கொள்கைகளைத் தயாரித்து மறு ஆய்வு செய்வதற்கு புதிய செயற்குழுவை அறிவித்திருக்கிறது.

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக் கட்சிகள் பரிந்துரைத்திருக்கும் அந்த அவசியமான கொள்கைகளை மறு ஆய்வு செய்து தயாரிப்பதற்கு அதன் சட்டமன்ற உறுப்பினர்கள் அடங்கிய சில செயற்குழுக்களை அமைத்திருப்பதாக பக்காத்தான் ஹராப்பான் செயலக மன்றம் நேற்று தெரிவித்தது.

பொதுத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வெற்றி பெற்ற மூன்றாம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு போர்ட்டிக்சன் தீர்மானம் என்பதன் அடிப்படையில் ஒன்பது செயற்குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாக பக்காத்தான் ஹராப்பான் செயலக மன்றம் அதன் கூட்டறிக்கையில் தெரிவித்தது.

போர்ட்டிக்சன் தீர்மானமானது பக்காத்தான் ஹராப்பானின் முக்கியத் தலைவர்கள் கடந்த மாதம் ஒன்றுகூடி நிறைவேற்றினர். இந்தச் செயற்குழுக்களில் நிபுணர்கள், இதர கட்சிகளைச் சேர்ந்தவர்களும் சேர்த்துக் கொள்ளப்படுவர் என்று அந்தக் கூட்டறிக்கையில் கையொப்பமிட்டிருக்கும் பக்காத்தான் ஹராப்பான் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில், அமானா தலைமைச் செயலாளர் டத்தோ டாக்டர் முகமட் ஹட்டா முகமட் ரம்லி, ஜசெக தேசிய அமைப்புச் செயலாளர் அந்தோணி லோக் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.

கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், பாதுகாப்பு, இளைஞர், வாழ்க்கைச் செலவு, சட்டம் ஆகியவை இந்த ஒன்பது செயற்குழுக்களில் அடங்கும்.

கல்விப் பிரிவுக்கு சிம்பாங் ரெங்காம் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் மஸ்லீ மாலேக் தலைவராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். செத்தியா வங்சா நாடாளுமன்ற உறுப்பினர் நிக் நஸ்மி நிக் அமாட், கூலாய் நாடாளுமன்ற உறுப்பினர் தியோ நி சின், தம்பின் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஹசான் பஹாரும் ஆகியோரும் அச்செயற்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

சுகாதார செயற்குழுவுக்கு கோலசிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ஸுல்கிப்ளி அமாட் தலைவராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

இந்தச் செயற்குழுவில் கோப்பெங் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் லீ பூன் சாய், பண்டார் கூச்சிங் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கெல்வின் யி, லுமுட் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ வீரா டாக்டர் ஹட்டா ரம்லி, பாயான் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் சிம் ஸி ஸின், பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் ஓங் கியான் மிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மற்ற செயற்குழுக்களுக்கான தலைவர்கள் , செயற்குழு உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட செயற்குழுக்களின் முதல் கூட்டத்திற்குப் பின் அறிவிக்கப்படுவர் என்று அக்கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here